8 அணிகள் பங்கேற்கும் 10-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டிஎன்பிஎல்) 20 ஓவர் கிரிக்கெட் தொடர் ஜூலை 31-ந்தேதி முதல் ஆகஸ்டு 23-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் ஜூலை 3-ந்தேதி நடத்தப்பட உள்ளது.
இதையொட்டி அனைத்து அணிகளும் தக்கவைத்த மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியலை டிஎன்பிஎல் நிர்வாகத்திடம் சமர்ப்பித்திருந்த நிலையில், அந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
4 முறை சாம்பியன் பட்டம் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தனது முக்கிய வீரர்களில் பலரை தக்க வைத்துள்ளது. அபிஷேக் தன்வர், ஸ்வப்னில் சிங், ஜெகதீசன், மொகித் ஹரிகரன், லோகேஷ் ராஜ், சிலம்பரசன், ஆஷிக், பிரேம்குமார், தினேஷ் ராஜ், ராஜலிங்கம், சுனில் கிருஷ்ணா ஆகியோர் தக்க வைக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், அணியில் இருந்த 9 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நடப்பு சாம்பியனான திருப்பூர் தமிழன்ஸ் அணி கேப்டன் சாய் கிஷோர், இசக்கிமுத்து உள்ளிட்ட 14 வீரர்களை தக்கவைத்துள்ளது. 6 வீரர்களை விடுவித்துள்ளது.
மற்ற அணிகளில் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் எண்ணிக்கை:
திருச்சி கிராண்ட் சோழாஸ் - 13 வீரர்கள்
திண்டுக்கல் டிராகன்ஸ் - 12 வீரர்கள்
கோவை கிங்ஸ் -11 வீரர்கள்
நெல்லை ராயல் கிங்ஸ் - 15 வீரர்கள்
மதுரை பாந்தர்ஸ் - 11 வீரர்கள்
சேலம் ஸ்பார்டன்ஸ் - 16 வீரர்கள்
8 அணிகளும் சேர்த்து மொத்தம் 103 வீரர்களை தக்கவைத்துள்ளன. அதே நேரத்தில் 56 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். விடுவிக்கப்பட்ட மற்றும் புதிய வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க தங்களது பெயர்களை டிஎன்பிஎல் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க இணையதளங்களில் வருகிற 25-ந்தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த ஆண்டு ஒவ்வொரு அணியும் ஏலத்தில் அதிகபட்சமாக ரூ.50 லட்சம் வரை செலவிட அனுமதிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியிடம் தற்போது ரூ.24 லட்சம் கையிருப்பில் உள்ளது. இதனால் ஏலத்தில் திறமையான வீரர்களை வாங்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.