சென்னை,
5-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. விறுவிறுப்பான இந்த போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முதல் அணி எது? என்பதை நிர்ணயிக்கும் முதலாவது தகுதிச் சுற்றுப் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
இன்றைய ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற திருச்சி அணியின் கேப்டன் ராஹில் ஷா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலாவதாக பேட்டிங் செய்தது.
சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கவுசிக் காந்தி மற்றும் ஜெகதீசன் களமிறங்கினர். சரவணன் குமார் வீசிய 2-வது ஓவரில் கவுசிக் காந்தி பவுல்ட்(1) ஆனார். மறுபுறம் 2 பவுண்டரிகளை விளாசிய ஜெகதீசன்(14) மீண்டும் சரவணன் குமாரின் பந்துவீச்சில் 4-வது ஓவரில் பவுல்ட் ஆனார்.
தொடக்க ஆட்டக்காரர்களை இழந்து அணி சற்று தடுமாறிய நிலையில், அடுத்து களமிறங்கிய ராதாகிருஷ்ணன் நிலைத்து நின்று ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டார். 54 பந்துகளில் 7 பவுண்டரிகள், 3 சிக்சர்களை பறக்கவிட்டு 82 ரன்களை சேர்த்த ராதாகிருஷ்ணன், இறுதி வரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார்.
சசிதேவ் ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாறினாலும், சற்று நிதாமனாக ஆடி 29 பந்துகளில் 23 ரன்கள் எடுத்த நிலையில் மதினாணன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். ராஜகோபால் சதீஷ் 29 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்தில் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் சேர்த்தது. திருச்சி அணியில் அதிகபட்சமாக சரவணன் குமார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.