தம்புல்லா,
இறுதிப்போட்டியில் இந்தியா-ஏ மற்றும் இலங்கை-ஏ அணிகள் கோப்பையை கைப்பற்றும் நோக்கில் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
இலங்கையின் தம்புல்லாவில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா-ஏ, இலங்கை-ஏ மற்றும் ஆப்கானிஸ்தான்-ஏ அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. தொடரின் 6-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கை-ஏ மற்றும் ஆப்கானிஸ்தான்-ஏ அணிகள் மோதின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை-ஏ அணி, தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியது. அணியின் தொடக்க வீரர் அவிஷ்கா பெர்னாண்டோ சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினார். அவரது அதிரடி இன்னிங்சின் உதவியுடன் இலங்கை-ஏ அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து 323 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய ஆப்கானிஸ்தான்-ஏ அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. இம்ரான் மிர், நூர் உல் ரஹ்மான் டக் அவுட் ஆகி வெளியேறினர். இருப்பினும் ஹசன் ஈசாகில் 74 ரன்கள் எடுத்து வெற்றிக்காக போராடினார். அவருடன் பார்மானுல்லா சபி 43 ரன்களும், பஹிர் ஷா 35 ரன்களும் சேர்த்தனர்.
இருப்பினும் மற்ற வீரர்கள் இலங்கை-ஏ அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 42.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆப்கானிஸ்தான்-ஏ அணி 219 ரன்களுக்கு சுருண்டது.
இதன் மூலம் இலங்கை-ஏ அணி 103 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதையடுத்து நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா-ஏ மற்றும் இலங்கை-ஏ அணிகள் கோப்பையை கைப்பற்றும் நோக்கில் பலப்பரீட்சை நடத்த உள்ளன.