வாஷிங்டன்,
20 அணிகள் பங்கேற்கும் 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. கடந்த 7-ந்தேதி தொடங்கிய இந்த கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் மார்ச் 8-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த கிரிக்கெட் தொடரில் அமெரிக்க கிரிக்கெட் அணியும் இடம்பெற்றுள்ளது.
மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், அமெரிக்க அணியை இந்தியா 29 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இருப்பினும் இந்திய அணிக்கு அமெரிக்க பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடியை கொடுத்தனர்.
இந்த நிலையில், அமெரிக்க கிரிக்கெட் அணிக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து கொண்டிருப்பதாக கேள்விப்பட்டேன். அமெரிக்க அணிக்கு வாழ்த்துகள். அமெரிக்க கிரிக்கெட் அணி வலுவாக உள்ளது. உங்கள் வெற்றிக்காக அமெரிக்கா காத்திருக்கிறது!” என்று பதிவிட்டுள்ளார்.