பெங்களூரு,
ஐபிஎல் 2026 சீசனில் தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வென்ற பெங்களூரு அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய ஆல்-ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர், சமூக ஊடக விமர்சனங்கள் தன்னை பாதித்ததாக கூறியுளார்.
ஐபிஎல் 2025 சீசனில் கொல்கத்தா அணிக்காக எதிர்பார்த்த அளவுக்கு செயல்படாததால் வெங்கடேஷ் ஐயர் கடுமையான விமர்சனங்களையும் டிரோல்களையும் சந்தித்தார். பின்னர், ஐபிஎல் 2026 ஏலத்தில் ஆர்சிபி அவரை ரூ.7 கோடிக்கு வாங்கியது.
இதுகுறித்து பேசிய அவர், "சமூக ஊடக விமர்சனங்கள் என்னை பாதிக்கவில்லை என்று சொன்னால் அது பொய்யாகிவிடும். அவை அனைவரையும் பாதிக்கும். ஆனால் அதற்கு நான் ஒருபோதும் எதிர்வினையாற்றவில்லை. நான் எப்போது நன்றாக விளையாடவில்லை என்பது எனக்குத் தெரியும். அதை வேறு யாரும் வந்து சொல்ல வேண்டியதில்லை," என்றார்.
விமர்சனங்களும் டிரோல்களும் ஒரு வீரரின் வாழ்க்கையின் ஒரு பகுதி எனக் கூறிய வெங்கடேஷ், அவற்றை விட தனது உழைப்பு மற்றும் அணுகுமுறையிலேயே கவனம் செலுத்தியதாக தெரிவித்துள்ளார்.
"நீங்கள் நன்றாக விளையாடினாலும் மக்கள் பேசுவார்கள், விளையாடாவிட்டாலும் பேசுவார்கள். நம்மால் கட்டுப்படுத்தக்கூடியது நம்முடைய உழைப்பும் அணுகுமுறையும் மட்டுமே. அதில் தான் நான் கவனம் செலுத்தினேன்," என்று கூறினார்.
ஆர்சிபி அணியின் சூழல் தனது கம்பேக்குக்கு முக்கிய காரணமாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
"ஆர்சிபியில் நான் ஒருபோதும் தனிமையாக உணரவில்லை. அது என் சொந்த வீட்டில் இருப்பது போன்ற உணர்வை அளித்தது. அந்த ஆதரவே என்னை முன்னோக்கி செல்ல வைத்தது," என்றார்.
சமூக ஊடகங்களில் விமர்சனங்களை சந்தித்த வெங்கடேஷ் ஐயர், வார்த்தைகளால் அல்ல, தனது ஆட்டத்தின் மூலம் பதிலடி கொடுத்து, ஆர்சிபியின் தொடர்ச்சியான இரண்டு ஐபிஎல் கோப்பை வெற்றிகளிலும் முக்கிய பங்காற்றி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார்.