சென்னை,
37 அணிகள் இடையிலான விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சி பிரிவில் இடம் பெற்றிருந்த தமிழக அணி தனது கடைசி லீக்கில் நேற்று அரியானாவை, சென்னையில் சந்தித்தது. முதலில் பேட் செய்த அரியானா அணி 6 விக்கெட் இழப்புக்கு 310 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ராகுல் திவேதியா 91 ரன்களும் (8 பவுண்டரி, 5 சிக்சர்) ஹிமான்ஷூ ராணா 89 ரன்களும் (5 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினர்.
அடுத்து களம் இறங்கிய தமிழக அணியால் 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 233 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் அரியானா 77 ரன்கள் வித்தியாசத்தில் 6-வது வெற்றியை பதிவு செய்து கால்இறுதியை உறுதி செய்தது. தமிழக அணியில் அபினவ் முகுந்த் (47 ரன்), கேப்டன் விஜய் சங்கர் (44 ரன்) தவிர மற்றவர்கள் சோபிக்கவில்லை. முரளிவிஜய் 24 ரன்னில் கேட்ச் ஆனார்.