கிரிக்கெட்

35 வயதில் திடீர் ஓய்வை அறிவித்த சிஎஸ்கே முன்னாள் வீரர் விஜய் சங்கர்

இந்திய அணிக்காக விஜய் சங்கர் 12 ஒருநாள் மற்றும் 9 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

சென்னை,

இந்திய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டரும், தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரருமான விஜய் சங்கர், அனைத்து வடிவ உள்ளூர் முதல் தர கிரிக்கெட் மற்றும் ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். 35 வயதான அவர், நேற்று தனது சமூக வலைதளப் பக்கம் மூலமாக இந்த முடிவை அதிகாரபூர்வமாக வெளியிட்டார்.

கடந்த 2018, 2019-ம் ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட் அணிக்காக முத்திரை பதித்த விஜய் சங்கர், 12 ஒருநாள் மற்றும் 9 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடியுள்ளார். குறிப்பாக, 2019-ம் ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் ‘முப்பரிமாண (3D) வீரராக’ இடம் பெற்று கவனம் ஈர்த்தார். ஆனால், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தின் போது ஏற்பட்ட காயம் காரணமாக அந்தத் தொடரில் இருந்து பாதியிலேயே விலகினார். அதன் பிறகு இந்திய அணியில் இவருக்கு மீண்டும் இடம் கிடைக்கவில்லை.

உள்ளூர் கிரிக்கெட்டில் தமிழக அணிக்காக நீண்ட காலம் விளையாடிய அவர், கடந்த சீசனில் திரிபுரா அணிக்காக விளையாடினார். நடப்பு ஆண்டின் ஐ.பி.எல். ஏலத்தில் எந்தவொரு அணியும் இவரை ஏலத்தில் எடுக்க முன்வராத நிலையில், தற்போது தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

தனது ஓய்வு குறித்து விஜய் சங்கர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"கிரிக்கெட் தான் எனது வாழ்க்கை. நான் 10 வயதில் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினேன். 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஒவ்வொரு நிலையிலும் உயர்ந்த மட்டத்தில் ஆடியதற்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நாட்டுக்காக விளையாடியது எப்போதும் பெருமைக்கும், மகிழ்ச்சிக்கும் உரிய தருணமாகும். புதிய வாய்ப்புகளைத் தேடுவதற்கும், இன்னும் நிறைய போட்டிகளில் விளையாடுவதற்காகவும் உள்ளூர் மற்றும் ஐ.பி.எல். போட்டியில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன்" என தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்காக விஜய் சங்கர் 12 ஒருநாள் மற்றும் 9 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 77 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 4253 ரன்கள் மற்றும் 43 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 112 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 2790 ரன்கள் மற்றும் 73 விக்கெட்டுகளையும், 159 டி20 போட்டிகளில் விளையாடி 2583 ரன்கள் மற்றும் 38 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளுக்காக மொத்தம் 78 ஆட்டங்களில் ஆடி 7 அரைசதங்களுடன் 1,233 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் 9 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.