குருகிராம்
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் குருகிராம் வீட்டில் ஆறுக்கும் மேற்பட்ட கார்கள் உள்ளன. அந்த கார்கள் குடிநீரில் கழுவி சுத்தம் செய்யப்பட்டு வந்துள்ளது. கோலி வீட்டின் பணியாளர்கள் குடிநீரை பயன்படுத்தி கார்களை கழுவி வந்துள்ளனர்.
அதைக் கண்ட பக்கத்துக்கு வீட்டுக்காரர், பொறுக்க முடியாமல் மாநகராட்சி அலுவலகத்தில் புகார் செய்துள்ளார். இதையடுத்து அந்த பகுதிக்கு வந்த அதிகாரிகள் கோலி வீட்டில் காருக்கு குடிநீரை பயன்படுத்தி கழுவி வந்த பணியாளரை கையும், களவுமாக பிடித்து ரூ.500 அபராதம் விதித்தனர்.
எனினும், கோலிக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல, அபராதத் தொகைக்கான சார்ஜ் ஷீட் அந்த பணியாளர் பெயரிலேயே கொடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடும் குடிநீர் பஞ்சம் இருக்கும் சூழலில் இப்படி செய்வது சரியா என பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் குடிநீரை அதிக அளவில் வீணாக்கி கார்களை கழுவியதாகக் கூறி, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு, 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அருகில் உள்ளவர்கள் அளித்த புகாரின் பேரில் விசாரணை செய்த அதிகாரிகள் கோலிக்கு 500 ரூபாயை அபராதமாக விதித்துள்ளனர். கடும் வறட்சி காரணமாக அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.