சென்னை,
இன்றைய ஒருநாள் போட்டியில் குல்தீப் யாதவுக்கு மாற்றாக வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், டி20 தொடரை 4-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முழுமையாக கைப்பற்றியது.
இதையடுத்து, இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதுகின்றன. அதன் முதல் போட்டி இன்று பர்மிங்காமில் நடைபெறுகிறது. இந்திய அணிக்கு விராட் கோலி, ரோகித் சர்மா, கே.எல். ராகுல் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் மீண்டும் அணியில் இணைந்திருப்பது கூடுதல் பலமாக கருதப்படுகிறது.
இந்த போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்குவார்கள். மூன்றாவது இடத்தில் விராட் கோலி களமிறங்குவார்.
நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் ஆகியோர் இடம் பெறலாம். இருப்பினும், அணியின் தேவைக்கேற்ப ராகுலின் பேட்டிங் வரிசை மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வலதுகை பேட்டர்கள் அதிகம் உள்ளதால், இடதுகை பேட்டரான அக்சர் படேல் 5 அல்லது 6-வது இடத்தில் களமிறங்கலாம்.
வேகப்பந்து வீச்சுத் துறையில் ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் அணிக்கு திரும்புவது மிகப்பெரிய பலமாகும். அவருடன் அர்ஷ்தீப் சிங் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம்பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.
இந்திய அணியின் முக்கிய குழப்பம் சுழற்பந்து வீச்சு மற்றும் ஆல்ரவுண்டர் தேர்வில்தான் உள்ளது.
துபே மற்றும் குல்தீப் இருவரையும் லெவனில் சேர்ப்பது வலுவானதாக தோன்றினாலும், அதனால் இந்தியாவின் பேட்டிங் பலம் 7-வது வரிசையிலேயே முடிவடைந்து விடும் அபாயம் உள்ளது. இதனால் குல்தீப் யாதவுக்கு மாற்றாக வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு வழங்கி, அவரை நடுவரிசையில் களமிறக்கலாம்.
உத்தேச இந்திய பிளேயிங் லெவன்
1. ரோகித் சர்மா
2. சுப்மன் கில் (கேப்டன்)
3. விராட் கோலி
4. ஸ்ரேயாஸ் ஐயர்
5. கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்)
6. அக்சர் படேல்
7. வாஷிங்டன் சுந்தர்
8. சிவம் துபே
9. ஜஸ்பிரித் பும்ரா
10. அர்ஷ்தீப் சிங்
11. பிரசித் கிருஷ்ணா