புதுடெல்லி,
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர பேட்ஸ்மேனுமான விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்ப வாய்ப்புள்ளதா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அவரது சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா அளித்துள்ள பதில் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜூன் 2011-ல் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான விராட் கோலி, ஜனவரி 2025 வரை இந்தியாவுக்காக 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 9,230 ரன்கள் குவித்தார். இந்தியாவின் டெஸ்ட் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த நான்காவது வீரராக அவர் திகழ்கிறார்.
கடந்த ஆண்டு மே 12-ம் தேதி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக கோலி அறிவித்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஓராண்டுக்கும் மேலாக டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகி இருந்தாலும், அவர் மீண்டும் வெள்ளை உடையில் இந்திய அணிக்காக களமிறங்க வேண்டும் என ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த சூழலில் இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில் பேசிய ராஜ்குமார் சர்மா, “விராட் கோலி உங்கள் பேச்சைக் கேட்பார். அதனால் அவரை மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்புமாறு கூறுங்கள் என்று பலர் என்னிடம் கேட்டனர்” என்று தெரிவித்தார்.
மேலும், “நீங்கள் கோலியிடம் மீண்டும் டெஸ்ட் போட்டிகளுக்கு வருமாறு கேட்டீர்களா?” என்ற கேள்விக்கு, “நாங்கள் அது குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்” என்று பதிலளித்தார். இதனால், கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்புவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளது.
2014 முதல் 2022 வரை இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்திய கோலி, 60 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு இந்தியாவின் மிக வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனாக உருவெடுத்தார். அவரது தலைமையில்தான் இந்திய அணி 2018-19-ம் ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்தது.