ஐதராபாத்,
ஐபிஎல் தொடரில் நேற்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 55 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீழ்த்தியது. இந்த போட்டியின் போது விராட் கோலி மற்றும் டிராவிஸ் ஹெட் இடையே மைதானத்தில் ஏற்பட்ட காரசாரமான விவாதம் மற்றும் போட்டிக்குப் பிந்தைய சம்பவம் தற்பொழுது பேசுபொருளாக மாறியுள்ளது.
ஐதராபாத்தின் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 256 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆர்சிபி அணி சேஸிங் செய்து கொண்டிருந்தது. வெங்கடேஷ் ஐயர் ஐதராபாத் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்து கொண்டிருந்த போது, மைதானத்தின் நடுவே விராட் கோலியும் டிராவிஸ் ஹெட்டும் ஏதோ பேசிக்கொண்டனர்.
இந்த மோதல் போட்டியுடன் முடிந்துவிடவில்லை. போட்டி முடிந்த பிறகு இரு அணி வீரர்களும் வழக்கமாக கைகுலுக்கிக் கொள்ளும் போது, விராட் கோலி மற்ற ஐதராபாத் வீரர்களுடன் கைகுலுக்கிவிட்டு, டிராவிஸ் ஹெட்டை முற்றிலும் புறக்கணித்து கைகுலுக்காமல் கடந்து சென்றார். டிராவிஸ் ஹெட் கைகொடுத்தபோதும் கோலி அவரைத் திரும்பிப் பார்க்காமல் சென்றது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கிடையில், பிளேஆப் சுற்றின் 4-வது மற்றும் கடைசி இடத்திற்கான போட்டி இன்னும் மூன்று லீக் போட்டிகள் மீதமுள்ள நிலையில் மிகவும் விறுவிறுப்பாக மாறியுள்ளது. அந்த கடைசி ஒரு இடத்தைப் பிடிக்க பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் ஆகிய மூன்று அணிகளும் தீவிரமாகப் போட்டியிட்டு வருகின்றன.