புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து சமீபத்தில் இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பொறுப்பேற்றுக்கொண்டார்.
தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் பதவி காலியாக உள்ள நிலையில், அந்த பொறுப்பினை வி.வி.எஸ்.லஷ்மண் ஏற்றுக்கொள்வார் என பி.சி.சி.ஐ. அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். டிசம்பர் 4-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற உள்ள பி.சி.சி.ஐ-யின் வருடாந்திர பொதுக் கூட்டத்திற்கு முன்னதாக லட்சுமணனின் புதிய பொறுப்பு குறித்து பி.சி.சி.ஐ வெளியிட உள்ளது.
லக்ஷ்மன் தனது பணியின் ஒரு பகுதியாக, 19 வயதுக்குட்பட்ட அணி மற்றும் இந்திய ஏ அணியின் செயல்பாடுகளையும் மேற்பார்வையிடுவார்.
தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் பதவிக்காக பெங்களூரில் குறைந்தபட்சம் 200 நாட்கள் தங்க வேண்டியிருக்கும். இதனால், தனது இருப்பிடத்தை மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதால் லக்ஷ்மண் முதலில் அப்பதவியை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.