அபுதாபி,
20- ஓவர் உலக கோப்பை தொடரின் சூப்பர் குரூப்-12- பிரிவில் இன்று நடைபெறும் 38-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியும் வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங்கை துவக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சீரான இடைவெளியிலும் விக்கெட்டுகள் விழுந்ததால், வெஸ்ட் இண்டீஸ் அணியின் ரன்வேகம் சற்று மட்டுப்பட்டது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 157- ரன்களை வெஸ்ட் இண்டீஸ் அணி எடுத்தது. இதன் மூலம் 158- ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு ஆஸ்திரேலிய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தனது இன்னிங்சை துவங்கிய ஆஸ்திரேலியா துவக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் அபாரமாக ஆடினார்.
56 பந்துகளில் 89 ரன்கள் அடித்த வார்னர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு பக்க பலமாக ஆடிய மிட்செல் மார்ஷ் 32 பந்துகளில் 53 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய அணி 16.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் அடித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.