மும்பை,
10 அணிகள் இடையிலான 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் நடந்து வருகிறது. நவி மும்பையில் உள்ள டி ஒய் பாட்டில் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 48-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்று பேட்டிங் செய்த குஜராத் அணி சாய் சுதர்சன் அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணி 16 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 145 ரன்கள் அடித்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய சுப்மன் கில் 9 ரன்களில் ரன் அவுட்டானார். சந்தீப் சர்மா வீசிய 3-வது ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட கில், அந்த பந்தை கவர்ஸ் பகுதியில் இருந்த ரிஷி தவான்-யிடம் அடித்து விட்டு ஒரு ரன் எடுக்க முயன்றார்.
அப்போது அவர் ரன் எடுக்க ஓடுகையில் பந்துவீச்சாளர் சந்தீப் சர்மா மீது லேசாக மோதிவிட்டு ஓட அதற்குள் ரிஷி தவான் நேரடியாக ஸ்டம்பில் அடித்து கில்-லை அவுட்டாக்கினார்.
சந்தீப் சர்மா கில்-லுக்கு இடையூறு செய்யாமல் ஒரே இடத்தில் நின்ற போதும் , சந்தீப் சர்மா இடையூறு செய்ததாக கில் அவரிடமே அதிருப்தியை வெளிப்படுத்தினார். கிரிக்கெட் விதிமுறைகளின் படி பேட்ஸ்மேன் ரன் ஓடுவதை பார்த்துவிட்டு அந்த வழியில் வேண்டும் என்றே சென்று இடையூறு செய்தால் மட்டுமே அது தவறாகும்.
ஆனால் நேற்று சந்தீப் சர்மா அவ்வாறு எதுவும் செய்யவில்லை. இதனால் சுப்மன் கில் அவுட்டாகியது சரியே என்று இணையத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.