அகமதாபாத்,
ஐபிஎல் 2026 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள இறுதிப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இறுதிப்போட்டியை முன்னிட்டு இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்போட்டிக்கு முன் பேசிய குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில், சொந்த மைதானத்தில் விளையாடுவது அணிக்கு சாதகமாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
அவர் கூறுகையில், “உண்மையை சொல்லப்போனால் எங்கள் அணி மீதான எதிர்பார்ப்பை நான் சுமையாக உணரவில்லை. உள்ளூர் மைதானத்தில் ஆடுவதை ஒரு சாதகமான அம்சமாகவே பார்க்கிறேன். இந்த ஆடுகளத்தின் தன்மை மற்றும் இங்குள்ள சூழ்நிலை எங்களுக்கு நன்றாக தெரியும்” என்றார்.
மேலும் பேசிய அவர், “இந்த மைதானத்தில் வெற்றி பெற எந்த வகையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். அந்த அனுபவம் இறுதிப்போட்டியில் எங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன்” என தெரிவித்தார்.
இறுதிப்போட்டி குறித்து கருத்து தெரிவித்த கில், “இறுதிப்போட்டி என்பது திறமையை விட மன உறுதியை அதிகம் சார்ந்தது. அந்த அழுத்தத்தையும் சவாலையும் யார் சிறப்பாக எதிர்கொள்கிறார்களோ, அவர்களே வெற்றியாளர்களாக உருவெடுப்பார்கள். இந்த இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றால், அது எங்களுக்கு மிகச்சிறந்த ஐபிஎல் தொடராக அமையும். அந்த இலக்கை அடைய முழு அணியும் தயாராக உள்ளது” என்று சுப்மன் கில் கூறினார்.