கிரிக்கெட்

யார் இந்த சாய்ராஜ் பஹுதுலே? - இந்திய அணியின் சுழற்பந்து பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் வீரர்

சாய்ராஜ் பஹுதுலே, இந்திய அணிக்காக 2 டெஸ்ட் மற்றும் 8 ஒருநாள் போட்டிகள் உட்பட மொத்தம் 10 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான சாய்ராஜ் பஹுதுலேவை இந்திய ஆண்கள் அணியின் புதிய சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக நியமித்துள்ளது. இந்திய அணி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தொடர்ச்சியாக விளையாடவுள்ள பிஸியான அட்டவணைக்கு முன்னதாக இந்த முக்கிய நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் பஹுதுலே

லெக்-ஸ்பின்னராக விளையாடிய சாய்ராஜ் பஹுதுலே, இந்திய அணிக்காக 2 டெஸ்ட் மற்றும் 8 ஒருநாள் போட்டிகள் உட்பட மொத்தம் 10 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். சர்வதேச அரங்கில் நீண்டகாலம் விளையாடாதபோதிலும், உள்நாட்டு கிரிக்கெட்டில் மிகச் சிறந்த சாதனைகளைப் படைத்தவர் என்ற பெயரை பெற்றுள்ளார்.

பயிற்சியாளராக நீண்ட அனுபவம்

முழுநேர பயிற்சியாளராக மாறிய பிறகு, சாய்ராஜ் பஹுதுலே , விதர்பா, கேரளா, குஜராத் மற்றும் பெங்கால் ஆகிய மாநில அணிகளின் தலைமை பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார்.

ஐபிஎல் மற்றும் யு-19 உலகக் கோப்பை அனுபவம்

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஐதராபாத் அணிகளின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார். மேலும், ஐசிசி யு-19 உலகக் கோப்பை 2022 தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் செயல்பட்டுள்ளார்.

இந்திய அணியின் அடுத்தடுத்த தொடர்கள்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உள்நாட்டுத் தொடரின் மூலம் இந்திய அணி மீண்டும் களமிறங்க உள்ளது. இந்த தொடரில் ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதையடுத்து இந்திய அணி அயர்லாந்தில் 2 டி20 போட்டிகளிலும், பின்னர் இங்கிலாந்தில் 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளிலும் விளையாட உள்ளது.

ரோகித் - கோலி மீண்டும் வருகை

இந்த ஆப்கானிஸ்தான் தொடரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களான ரோகித் மற்றும் கோலி மீண்டும் அணிக்குத் திரும்பவுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.