image courtesy: PTI 
கிரிக்கெட்

அவர்கள் அணியில் இருக்கும்போது கவலை எதற்கு - சி.எஸ்.கே. கேப்டன் பேட்டி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி மே 26-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதன் முதலாவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை - பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

ஐ.பி.எல். கிரிக்கெட் உதயமான 2008-ம் ஆண்டில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வந்த எம்.எஸ்.டோனி நேற்று அந்த பொறுப்பில் இருந்து திடீரென விலகினார். 42 வயதான டோனி கடந்த ஆண்டே கிரிக்கெட்டுக்கு முழுக்கு போட விரும்பினார். ஆனால் ரசிகர்களுக்காக மேலும் ஒரு சீசன் விளையாட இருப்பதாக அறிவித்தார்.

இந்த நிலையில் 17-வது ஐ.பி.எல். போட்டி தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பாக அவர் கேப்டன்ஷிப்பை விட்டு ஒதுங்கியுள்ளார். சென்னை சூப்பர் கிங்சின் கேப்டன் பதவியில் இருந்து டோனி விலகிய நிலையில், புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2019இல் சிஎஸ்கே அணிக்காக அறிமுகமான ருதுராஜ் 2021 சீசனில் அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்று கோப்பையை வெல்ல உதவினார். அந்த வகையில் கடந்த 5 வருடங்களாக தோனி தலைமையில் விளையாடிய அவர் சர்வதேச கிரிக்கெட்டிலும் அறிமுகமாகி கணிசமான போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இந்நிலையில் தோனியின் இடத்தில் சி.எஸ்.கே. அணியின் கேப்டனாக செயல்படுவது மிகப்பெரிய பொறுப்பான வேலை என்று ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார். அதே சமயம் தமக்கு தோனி, ரகானே, ஜடேஜா ஆகிய 3 அனுபவ வீரர்கள் உதவியாக உள்ளதாக ருதுராஜ் தெரிவித்துள்ளார். எனவே கேப்டன்ஷிப் அழுத்தத்தை நினைத்து கவலைப்படவில்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு:-

"இது நல்ல உணர்வை கொடுக்கிறது. கண்டிப்பாக இது கவுரவமாகும். அதையும் தாண்டி நான் அதிகமாக உணர்கிறேன். அதே சமயம் இது மிகப்பெரிய பொறுப்பாகும். இருப்பினும் எங்களிடம் நல்ல அணி இருப்பதால் நான் உற்சாகமாக இருக்கிறேன். எல்லோருக்கும் போதுமான அனுபவம் இருக்கிறது. அதனால் எனக்கு அதிக வேலை செய்ய வேண்டியதில்லை. மேலும் எனக்கு அணியில் மஹி பாய், ஜடேஜா பாய், ரஹானே பாய் ஆகியோர் வழி நடத்துவதற்காக உள்ளனர். எனவே அவர்கள் இருக்கும்போது கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை. இந்த வேலையை நான் அனுபவிக்க காத்திருக்கிறேன்" என்று கூறினார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்