கிரிக்கெட்

தோற்றாலும் கெத்து காட்டிய கேப்டன் - உலகக் கோப்பை வரலாற்றில் முதல் இங்கிலாந்து வீராங்கனையாக சாதனை

ஆஸ்திரேலியா 7-வது முறையாக டி20 உலகக் கோப்பை பட்டத்தை கைப்பற்றியது.

சென்னை,

மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தாலும் இங்கிலாந்து கேப்டன் வரலாற்று சாதனை ஒன்றை படைத்தார்.

இறுதிப்போட்டி

10-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் ஆஸ்திரேலியா அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 7-வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, கேப்டன் நாட் சிவர்-பிரண்டின் பொறுப்பான ஆட்டத்தின் உதவியுடன் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது. சிவர்-பிரண்ட் 53 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 58 ரன்கள் குவித்தார்.

இதையடுத்து 151 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஆஸ்திரேலியா, 17.1 ஓவர்களில் இலக்கை எட்டி 7-வது மகளிர் டி20 உலகக் கோப்பை பட்டத்தை வென்றது. அந்த அணியின் பெத் மூனி 64 ரன்கள் குவித்தார்.

சாதனை படைத்த கேப்டன்

இங்கிலாந்து அணி ரன்னர்-அப் பட்டத்துடன் தொடரை நிறைவு செய்தாலும், கேப்டன் நாட் சிவர்-பிரண்ட் வரலாற்று சாதனை ஒன்றை படைத்தார். மகளிர் டி20 உலகக் கோப்பை வரலாற்றில், அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி ஆகிய இரு நாக்-அவுட் ஆட்டங்களிலும் அரைசதம் அடித்த முதல் இங்கிலாந்து வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுடனாக அரையிறுதி ஆட்டத்தில் நாட் சிவர்-பிரண்ட் 75 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.