கிரிக்கெட்

மகளிர் டி20 உலகக் கோப்பை: இந்தியா - தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்

இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

மான்செஸ்டர்,

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் முக்கியமான லீக் ஆட்டத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

உலகக் கோப்பை தொடர்

மகளிருக்கான 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் விளையாடி வருகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

அந்த வகையில், குரூப்-1 பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மான்செஸ்டரில் நடைபெறும் 18-வது லீக் ஆட்டத்தில் மோதுகின்றன. இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

இந்திய அணி

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் நெதர்லாந்தை 95 ரன்கள் வித்தியாசத்தில் சாய்த்து அபாரமான வெற்றியை பதிவு செய்தது. இரண்டு தொடர்ச்சியான வெற்றிகளால் உற்சாகத்தில் இருக்கும் இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை வலுப்படுத்தும் நோக்கில் களமிறங்குகிறது.

தென் ஆப்பிரிக்கா

லாரா வோல்வார்ட் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் 65 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆனால் அடுத்த போட்டியில் பாகிஸ்தானை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பாதைக்கு திரும்பியது. இதனால், இந்தியாவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேற தென் ஆப்பிரிக்க அணி தீவிரம் காட்டும்.

பரபரப்புக்கு பஞ்சமில்லை

இரு அணிகளும் சமபலத்தில் இருப்பதாலும், அரையிறுதி வாய்ப்பை பலப்படுத்தும் முக்கியமான ஆட்டமாக இருப்பதாலும், இன்றைய இந்தியா - தென்ஆப்பிரிக்கா மோதலில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.