கால்பந்து

பிரீமியர் லீக் கோப்பையுடன் ஊர்வலம் வந்த ஆர்சனல் வீரர்கள் - ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

ஆர்சனல் அணி 22 ஆண்டுகளுக்குப் பிறகு பிரீமியர் லீக் சாம்பியன் பட்டத்தை வென்றது.

லண்டன்,

பிரபல கால்பந்து தொடரான பிரீமியர் லீக் தொடரில், ஆர்சனல் அணி 22 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. சாம்பியன் பட்டத்தை வென்றதை முன்னிட்டு, லண்டனில் உள்ள எமிரேட்ஸ் ஸ்டேடியம் அருகே கோப்பையுடன் அணி வீரர்கள் ஊர்வலமாக வந்தனர். இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ரசிகர்களின் உற்சாக கொண்டாட்டம்

ஆர்சனல் கொடிகள், பதாகைகளுடன் ரசிகர்கள் ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். எமிரேட்ஸ் ஸ்டேடியத்தை சுற்றிய பகுதிகளில் விண்ணதிரும் முழக்கங்கள் எழுப்பிய ரசிகர்கள், 22 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த பிரீமியர் லீக் வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர்.

சாம்பியன்ஸ் லீக் தோல்வி ஏமாற்றம்

இதற்கிடையில், சனிக்கிழமை நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் பிஎஸ்ஜி அணியிடம் ஆர்சனல் தோல்வியடைந்தது. இதனால் வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டிருந்தாலும், பிரீமியர் லீக் வெற்றியின் மகிழ்ச்சி அதனை ஓரளவு மறக்க செய்தது.

விறுவிறுப்பான இறுதிப்போட்டி

புடாபெஸ்டில் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டி கடும் பரபரப்பை ஏற்படுத்தியது. நிர்ணயிக்கப்பட்ட நேரம் மற்றும் கூடுதல் நேர முடிவிலும் இரு அணிகளும் சமநிலையில் இருந்ததால், வெற்றியாளரை தீர்மானிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை பயன்படுத்தப்பட்டது.

பெனால்டியில் பிஎஸ்ஜி வெற்றி

பெனால்டி ஷூட்-அவுட்டில் ஆர்சனல் வீரர் கேப்ரியல் மகல்ஹேஸ் அடித்த பந்து கோல் போஸ்ட்டிற்கு மேலே சென்றது. இதைத் தொடர்ந்து பிஎஸ்ஜி அணி தங்களது வாய்ப்புகளை அருமையாக பயன்படுத்தி, 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று ஐரோப்பிய மகுடத்தை தக்கவைத்து கொண்டது.