கால்பந்து

லா லிகா கால்பந்து - ரியல் மாட்ரிட்டை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்ற பார்சிலோனா

தனது 29-வது லா லிகா பட்டத்தை பார்சிலோனா தட்டிச் சென்றது.

மாட்ரிட் ,

தொடர்ந்து இரண்டாவது முறையாக பார்சிலோனா அணி லா லிகா சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில் ரியல் மாட்ரிட் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, தனது 29-வது லா லிகா பட்டத்தை பார்சிலோனா தட்டிச் சென்றது.

போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, பார்சிலோனா பயிற்சியாளர் ஹன்சி பிளிக்கின் தந்தை காலமானார் என்ற சோகமான செய்தி வெளியானது. இக்கட்டான இந்தச் சூழலிலும் களமிறங்கிய பார்சிலோனா வீரர்கள், பயிற்சியாளருக்கு கோப்பையை பரிசாக அளித்தனர்.

ஆட்டம் தொடங்கிய 9-வது நிமிடத்திலேயே, பெனால்டி பாக்ஸிற்கு வெளியே இருந்து மார்கஸ் ராஷ்போர்ட் ஒரு அபாரமான 'டைரக்ட் பிரீ கிக்' மூலம் கோல் அடித்து பார்சிலோனாவை 1-0 என முன்னிலைப்படுத்தினார். அடுத்த 9 நிமிடங்களில் (18-வது நிமிடம்), டானி ஆல்மோ வழங்கிய லாவகமான பாஸை, பெரான் டோரஸ் கோலாக மாற்றினார்.

இறுதியில் காம்ப் நூ மைதானத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில், ஹன்சி பிளிக்கின் பார்சிலோனா அணி 2-0 என வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.