கால்பந்து

சாம்பியன்ஸ் லீக் அரைஇறுதியில் அதிரடி... அட்லெட்டிகோ மாட்ரிட் - ஆர்சனல் ஆட்டம் ‘டிரா’

இந்த அரைஇறுதிச் சுற்று இரண்டு ஆட்டங்களைக் கொண்டதாகும்.

மாட்ரிட்,

ஐரோப்பிய கிளப் அணிகளுக்கு இடையிலான புகழ்பெற்ற சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் விறுவிறுப்பான முதல் அரைஇறுதி ஆட்டம் ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் நடைபெற்றது.

இந்த அரைஇறுதி ஆட்டத்தில் ஸ்பெயினின் அட்லெட்டிகோ மாட்ரிட் மற்றும் இங்கிலாந்தின் ஆர்சனல் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டத்தின் 44-வது நிமிடத்தில் ஆர்சனல் அணியின் விக்டர் கியோகிரெஸ் ஒரு பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து இரண்டாம் பாதியில் ஆக்ரோஷமாக விளையாடிய அட்லெட்டிகோ மாட்ரிட் அணியின் ஜூலியன் அல்வாரெஸ், 56-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக்கி ஆட்டத்தை சமன் செய்தார். ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்ததால், போட்டி 1-1 என்ற கணக்கில் ‘டிரா’வில் முடிந்தது.

இந்த அரைஇறுதிச் சுற்று இரண்டு ஆட்டங்களைக் கொண்டதாகும். இதில் முதல் ஆட்டம் சமனில் முடிந்துள்ள நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது மற்றும் தீர்மானிக்கும் ஆட்டம் வரும் 5-ஆம் தேதி லண்டனில் நடைபெற உள்ளது. அந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.