லண்டன்,
ஐரோப்பிய கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதன் இறுதிப்போட்டி ரஷியாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் மே 28-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இருப்பதன் எதிரொலியாக சாம்பியன்ஸ் லீக் கால்பந்து இறுதிப்போட்டியை நடத்தும் உரிமை ரஷியாவிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது. இந்த இறுதிப்போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அதே தேதியில் (மே 28) நடைபெறும் என்று ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பின் அவசர செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டு நேற்று அறிவிக்கப்பட்டது. அத்துடன் மறுஅறிவிப்பு வரும் வரை ரஷியா மற்றும் உக்ரைன் கிளப்புகள் மற்றும் அந்த நாட்டு தேசிய அணிகளின் போட்டியை பொதுவான இடத்தில் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இது குறித்து ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மிகவும் நெருக்கடியான இந்த நேரத்தில் ஐரோப்பிய கால்பந்தின் மதிப்புமிக்க சாம்பியன்ஸ் லீக் போட்டியை பிரான்சுக்கு மாற்றுவதற்கு தனது தனிப்பட்ட ஆதரவையும், ஈடுபாட்டையும் காட்டிய பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரானுக்கு ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து கொள்கிறது.
மனிதர்கள் கடுமையான துன்பம், அழிவு மற்றும் இடம் பெயர்தலை எதிர்கொள்ளும் உக்ரைனில் இருந்து கால்பந்து வீரர்கள், அவர்களது குடும்பத்தினரை மீட்க எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பிரான்ஸ் அரசுடன் இணைந்து ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு முழுமையான ஆதரவு அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.