கால்பந்து ஜாம்பவான் மரடோனாவின் முன்னாள் மருத்துவர் ஒருவர், மரடோனாவின் மரணம் மாரடைப்பு போல் தெரியவில்லை என்று கூறியுள்ள விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 30 ஆண்டுகள் மரடோனாவுக்கு சிகிச்சையளித்த மருத்துவரான டாக்டர் ஆல்பிரடோ, மரடோனாவின் மரணம் ஒரு விதமான தற்கொலை என்று கூறியுள்ளார்.
1977 முதல் 2007வரை மரடோனாவின் மருத்துவராக இருந்த டாக்டர் ஆல்பிரடோ, மரடோனா தனது மூளை அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து மன அழுத்தம் காரணமாகவும், வாழ்க்கை சலிப்பை ஏற்படுத்தியதாலும், மருந்துகள் சாப்பிடுவதை நிறுத்தியிருக்கலாம் என கருதுகிறார்.ஏற்கனவே ஒரு முறை மரடோனா தற்கொலைக்கு முயற்சித்ததாகவும் அதிர்ச்சி தகவல் ஒன்றை டாக்டர் ஆல்பிரடோ தெரிவித்துள்ளார்.
அத்துடன், மரடோனாவை கவனித்த மருத்துவமனை, அவருக்கு ஒரு ஹீரோவுக்குரிய சரியான கவனிப்பைக் கொடுக்கவில்லை என்றும் அவரை அலட்சியமாக நடத்தியதாகவும், அவரை மிக சீக்கிரம் மருத்துவமனையிலிருந்து விடுவித்துவிட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார் டாக்டர் ஆல்பிரடோ இதற்கிடையில், ஏற்கனவே போலீசாரும் மரடோனாவின் மரணத்தை தவிர்த்திருக்கமுடியுமா என்ற கோணத்தில் அவரது தற்போதைய மருத்துவரான லியோபோல்டோ லுக்வை விசாரணைக்குட்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.