ரஷ்யா,
21வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடைப்பெற்று வருகின்றன. இதில் இன்று மூன்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
முதலாவதாக மாலை 5.30 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் எப் பிரிவில் இடம் பெற்றுள்ள சுவீடன், தென்கொரியா அணிகள் மோதின. இதில் தென் கொரியாவை 1-0 என்ற கோல் கணக்கில் சுவீடன் அணி வீழ்த்தியது.
இரண்டாவதாக, இரவு 8.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் ஜி பிரிவில் இடம் பெற்றுள்ள, தரவரிசையில் 3வது இடத்தில் உள்ள பெல்ஜியம் அணியுடன், தரவரிசையில் 55வது இடத்தில் உள்ள பனாமா அணி மோதியது.
உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு முதன் முறையாக தகுதி பெற்றுள்ள பனாமா அணி, வலுவான பெல்ஜியம் அணியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே பரபரப்பு நிலவியது. முதல் பாதி ஆட்டம் வரையில் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் பலன் அளிக்காமல் போனது.
பின்னர் நடந்த இரண்டாவது பாதியில் பெல்ஜியம் அணியின் சார்பில் டிரிஸ் மெர்டென்ஸ் தனது முதல் கோலை அடித்து அணியை முன்னிலை பெற வைத்தார். அவரைத் தொடர்ந்து சக நாட்டு வீரரான ரோமேலு லுகாகு தொடர்ந்து 2 கோல்கள் அடித்து அசத்தினார். இதனால் பெல்ஜியம் அணி 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இறுதிவரை பனாமா அணியால் கோல் ஏதும் அடிக்க முடியவில்லை. இதன்மூலம் பனாமா அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பெல்ஜியம் அணி அபார வெற்றிபெற்றது.