மாஸ்கோ,
21-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா கடந்த மாதம் 14-ந்தேதி ரஷியாவில் கோலாகலமாக தொடங்கியது. 32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி முதல் சுற்றை தாண்டவில்லை. 5 முறை சாம்பியனான பிரேசில் கால் இறுதியுடன் முடங்கியது. முன்னாள் சாம்பியன்கள் அர்ஜென்டினா, ஸ்பெயின் அணிகள் 2-வது சுற்றுடன் உதைப்பட்டு நடையை கட்டின.
ஐரோப்பிய அணிகளான முன்னாள் சாம்பியன் பிரான்சும், குரோஷியாவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இவ்விரு அணிகளில் உலக கிரீடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி மாஸ்கோ நகரில் உள்ள லுஸ்னிகி ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது.
முந்தைய ஆட்டங்களில் கருப்பு நீல நிற உடைகளுடன் விளையாடிய குரோஷியா, முக்கியமான இந்த ஆட்டத்தில் தங்களது தேசிய கொடிக்குரிய நிறமான சிவப்பு, வெள்ளை நிறம் கலந்த கட்டம் போட்ட பனியன் அணிந்து களம் இறங்கினர். இரு அணிகளிலும் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.
ரசிகர்களின் ஆரவாரமான ஆர்ப்பரிப்புக்கு மத்தியில் இரு அணி வீரர்களும் இறுதிஉதையை தொடங்கினர். பிரான்ஸ் வீரர்கள் கோல் வாங்கி விடக்கூடாது என்ற முனைப்பில் தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்த, குரோஷிய வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடினர். பந்தும் இவர்கள் வசமே அதிகமாக வலம் வந்தது.
18-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் கிரிஸ்மானை, குரோஷியாவின் புரோஜோவிச் லேசாக தள்ளிவிட்டார். இதற்கு நடுவர் பிரிகிக் வாய்ப்பு வழங்கினார்.
பிரிகிக் வாய்ப்பில் ஏறக்குறைய 25 மீட்டர் தூரத்தில் இருந்து பிரான்சின் நட்சத்திர வீரர் கிரிஸ்மான் இலக்கை நோக்கி தூக்கியடித்த பந்தை, குரோஷியாவின் மரியோ மான்ட்ஜூகிக் தலையால் முட்டி வெளியே தள்ள முயன்ற போது, துரதிர்ஷ்டவசமாக அது வலைக்குள் நுழைந்து சுயகோலாக மாறியது. இதனால் குரோஷிய அணியினர் ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். மறுமுனையில் பிரான்ஸ் வீரர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். ஆனால் பிரான்சின் முன்னிலை நீண்ட நேரம் நிலைக்கவில்லை.
28-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் நிகோலோ கன்ட் பவுல் செய்து மஞ்சள் அட்டை எச்சரிக்கைக்கு உள்ளானதுடன் குரோஷியாவுக்கு பிரிகிக் வாய்ப்பு கிட்டியது.
பிரிகிக் வாய்ப்பில் குரோஷியாவின் தந்திரம் வித்தியாசமாக அமைந் தது. அதாவது குரோஷிய கேப்டன் மோட்ரிச் பந்தை வலையை நோக்கி அடிக்காமல், கம்பத்திற்கு வலது பக்கம் நின்ற வர்சல்ஜ்கோ பக்கம் தூக்கியடித்தார். பிறகு அவரிடம் இருந்து பந்து சக வீரர்களின் துணையுடன் கோல்பகுதிக்குள் வர, அதை குரோஷியாவின் இவான் பெரிசிச் இடது காலால் உதைத்து அற்புதமாக கோலாக்கி பதிலடி கொடுத்தார். இதையடுத்து ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமனுக்கு வந்தது.
கடந்த சில உலக கோப்பை இறுதி ஆட்டங்களில் வழக்கமான நேரத்தில் கோல் விழுவதே அதிசயமாக இருந்த நிலையில், இந்த உலக கோப்பையில் தொடக்கத்திலேயே அடுத்தடுத்து இரு கோல் தரிசனம் பார்த்ததில் ரசிகர்கள் பரவசத்திற்கு உள்ளானர்கள்.
இதன் பிறகு இரு அணி வீரர்களும் தாக்குதல் பாணியை தீவிரப்படுத்தினர். 38-வது நிமிடத்தில் கார்னரில் இருந்து பிரான்ஸ் வீரர் அடித்த ஷாட்டை குரோஷியாவின் இவான் பெரிசிச் எதிர்பாராத விதமாக கையால் தடுத்து விட்டார். அவர் பந்தை கையால் கையாண்டதை பார்த்த பிரான்ஸ் வீரர்கள் பெனால்டி கேட்டு நடுவரிடம் முறையிட்டனர்.