பிரேசில்,
இந்த ஆண்டின் பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் புதிய வரலாற்றை எழுதத் தயாராகி வருகிறது. வருகிற 12-ம் தேதி தொடங்கி ஜூலை 19-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த மெகா தொடர், உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
முதன்முறையாக 48 அணிகள் உலகக் கோப்பை பட்டத்திற்காக களமிறங்குகின்றன. மேலும், வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோஆகிய மூன்று நாடுகள் இணைந்து உலகக் கோப்பையை நடத்துகின்றன.
உலகக் கோப்பை வரலாற்றில் எந்த அணியும் பிரேசில் அளவிற்கு ஆதிக்கம் செலுத்தவில்லை. பிரேசில் இதுவரை 5 முறை உலகக் கோப்பையை வென்று அதிக முறை சாம்பியன் பட்டம் பெற்ற அணியாக திகழ்கிறது. 1958, 1962, 1970, 1994 மற்றும் 2002 ஆகிய ஆண்டுகளில் அந்த அணி கோப்பையை கைப்பற்றியது. ஆனால், 2002-க்குப் பிறகு 24 ஆண்டுகளாக உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் பிரேசில் தடுமாறி வருகிறது. 2026 உலகக் கோப்பையில் அந்த காத்திருப்புக்கு முடிவு கட்டும் நோக்கில் களமிறங்குகிறது.
பிரேசிலின் சாதனையை முறியடிக்க அதிக வாய்ப்புள்ள அணிகள் ஜெர்மனி மற்றும் இத்தாலிதான். இந்த இரு அணிகளும் தலா 4 முறை உலகக் கோப்பையை வென்றுள்ளன. மேலும் ஒரு முறை சாம்பியன் பட்டம் வென்றால், பிரேசிலின் 5 உலகக் கோப்பை சாதனையை சமன் செய்து விடும்.
அர்ஜென்டினா அணி இதுவரை 3 முறை உலகக் கோப்பையை வென்றுள்ளது. 2022-ல் சாம்பியன் பட்டம் வென்ற அந்த அணி, தற்போது நடப்பு சாம்பியனாக 2026 உலகக் கோப்பையை எதிர்கொள்கிறது. தனது பட்டத்தை தக்கவைத்துக்கொள்ளும் இலக்குடன் அர்ஜென்டினா களமிறங்க உள்ளது.
உலகக் கோப்பை வரலாற்றில் பிரான்ஸ் 2 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அதேபோல் இங்கிலாந்து, ஸ்பெயின் மற்றும் உருகுவே ஆகிய அணிகள் தலா ஒரு முறை உலகக் கோப்பையை வென்றுள்ளன.