டொராண்டோ:
2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 2-வது லீக் ஆட்டத்தில் தென்கொரியா அணி, செக் குடியரசை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றிகரமாக தனது பயணத்தை தொடங்கியது.
மெக்சிகோ - தென் ஆப்பிரிக்கா ஆட்டத்தைத் தொடர்ந்து நடைபெற்ற 2-வது லீக் போட்டியில் தென்கொரியா மற்றும் செக் குடியரசு அணிகள் மோதின. இந்திய நேரப்படி இன்று காலை 7.30 மணிக்கு தொடங்கிய இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க முடியாததால், ஆட்டம் 0-0 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது.
இரண்டாவது பாதி தொடங்கிய பிறகு ஆட்டம் விறுவிறுப்படைந்தது. 59-வது நிமிடத்தில் செக் குடியரசின் லாடிஸ்லாவ் க்ரெஜ்ஸி கோல் அடித்து தனது அணியை 1-0 என முன்னிலை பெற செய்தார்.
பின்னடைவை சந்தித்த தென்கொரியா அணி அதிரடியாக மீண்டு வந்தது. 67-வது நிமிடத்தில் ஹ்வாங் இன்-போம் கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என சமன் செய்தார். இதனைத் தொடர்ந்து ஆட்டத்தை தீவிரப்படுத்திய தென்கொரியா, 80-வது நிமிடத்தில் ஓ ஹியான்-கியூ கோல் அடித்து அணியை 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற செய்தார்.
இறுதி வரை அந்த முன்னிலையை தக்கவைத்துக் கொண்ட தென்கொரியா, செக் குடியரசை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உலகக்கோப்பை தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.