கோலாலம்பூர்,
ஆசிய கால்பந்து கூட்டமைப்பு கூட்டம் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நேற்று நடந்தது. இதில் 2019-2023-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது.
தலைவர் பதவிக்கு பக்ரைன் அரச குடும்பத்தை சேர்ந்த 53 வயதான ஷேக் சல்மான் பின் காலிபா போட்டியிட்டார். அவரை எதிர்த்து போட்டியிட மனு தாக்கல் செய்து இருந்த முகமது கல்பான் மாதர் சயீத் அல் ரோமாய்தி (ஐக்கிய அரபு அமீரகம்), அஜித் மால் முஹன்னாதி (கத்தார்) ஆகியோர் கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகினர். இதனால் ஷேக் சல்மான் பின் காலிபா போட்டியின்றி ஒருமனதாக தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
2022-ம் ஆண்டு கத்தாரில் உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற இருக்கும் நிலையில் ஷேக் சல்மான் பின் காலிபா ஆசிய கால்பந்து கூட்டமைப்பு தலைவராக மீண்டும் தேர்வாகி இருக்கிறார். ஆசிய கால்பந்து கூட்டமைப்பு தலைவர், சர்வதேச கால்பந்து சங்க (பிபா) துணைத் தலைவர் பதவியை கூடுதலாக வகிப்பது நடைமுறையாகும்.
ஷேக் சல்மான் பின் காலிபாவுக்கு, பிபா தலைவர் இன்பான்டினோ வாழ்த்து தெரிவித்தார். இந்த கூட்டத்தில் பங்கேற்ற இன்பான்டினோ பேசுகையில், உலக கோப்பை கால்பந்து போட்டியில் கூடுதலாக 16 அணிகளை சேர்க்க பெரும்பாலான உறுப்பினர் நாடுகள் ஆதரவு தெரிவித்து இருக்கின்றன. கத்தாரில் நடைபெற இருக்கும் உலக கோப்பை போட்டியில் கூடுதலாக அணிகளை சேர்க்கலாமா? என்பது குறித்து கத்தார் போட்டி அமைப்பு குழுவினருடன் பிபா ஆலோசனை நடத்தி வருகிறது.
இது குறித்து பிபாவின் கூட்டத்தில் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும். 48 அணிகள் பங்கேற்கும் உலக கோப்பை கால்பந்து போட்டி ஆசிய கண்டத்தில் முதலாவதாக நடந்தால் அது நல்ல சாதனையாகும் என்று தெரிவித்தார்.
ஆசிய கால்பந்து கூட்டமைப்பில் இருந்து 5 பேர் பிபா கவுன்சில் உறுப்பினராக தேர்வாக முடியும். இதற்கான தேர்தலில் போட்டியிட்ட இந்திய கால்பந்து சம்மேளன தலைவர் பிரபுல் பட்டேல் மொத்தம் பதிவான 46 ஓட்டுகளில் 38 வாக்குகளை பெற்று பிபா கவுன்சில் உறுப்பினர் ஆனார். இதன் மூலம் பிபா கவுன்சில் உறுப்பினரான முதல் இந்தியர் என்ற பெருமையை பிரபுல் பட்டேல் பெற்றார்.
பிரபுல் பட்டேல் கூறுகையில், இந்த பதவிக்கு என்னை தகுதியானவனாக நினைத்து ஆதரவளித்த ஆசிய கால்பந்து கூட்டமைப்பு உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். பிபா கவுன்சில் உறுப்பினர் பொறுப்பு மிகவும் பெரியதாகும். நான் எனது சொந்த நாட்டுக்கு மட்டுமின்றி ஆசிய மண்டலம் முழுவதற்கும் பிரதிநிதியாக பங்கேற்கிறேன். ஆசிய கால்பந்தின் வேகமான வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என்றார்.