கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து:சென்னை-பெங்களூரு அணிகள் இன்று மோதல்

இந்த ஆண்டின் கடைசி ஆட்டமான இதை வெற்றியுடன் முடிக்க இரு அணிகளும் தீவிரம் காட்டுகின்றன.

தினத்தந்தி

கோவா,

11 அணிகள் இடையிலான 8-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் இன்றிரவு 7.30 மணிக்கு அரங்கேறும் 45-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான சென்னையின் எப்.சி.யும், பெங்களூரு எப்.சி.யும் கோதாவில் குதிக்கின்றன.

சென்னை அணி 7 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 2 தோல்வி, 2 டிராவுடன் 11 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது. வழக்கத்திற்கு மாறாக இந்த சீசனில் தடுமாறும் பெங்களூரு அணி 8 ஆட்டங்களில் ஆடி ஒரு வெற்றி, 3 டிரா, 4 தோல்வி என்று 6 புள்ளி மட்டுமே எடுத்துள்ளது. தொடக்க ஆட்டத்திற்கு பிறகு பெங்களூரு அணி வெற்றிப்பாதைக்கு திரும்ப முடியாமல் போராடுகிறது.

இந்த நிலையில் ஆண்டின் கடைசி ஆட்டமான இதை வெற்றியுடன் முடிக்க இரு அணிகளும் தீவிரம் காட்டுகின்றன.

சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் போசிதார் பான்டோவிச் நேற்று கூறுகையில், சென்னை அணி இதுவரை விளையாடிய விதம் திருப்தி அளித்தாலும், இன்னும் முன்னேற்றம் காண வேண்டி உள்ளது. பெங்களூருவுக்கு எதிராக இதைவிட சிறந்த ஆட்டத்தை எதிர்பார்க்கிறேன். போட்டிகளில் வெற்றி பெற நாங்கள் அதிக கோல்கள் அடிக்க வேண்டியது அவசியமாகும். பெரும்பாலான ஆட்டங்களில் நிறைய கோல்கள் அடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் லேசான நெருக்கடியால் தவறவிட்டு விட்டோம். நெருக்கடியை சமாளிக்க கற்றுக்கொள்ள வேண்டும். பதற்றமின்றி ரிலாக்சாக இருந்தாலே போதும். கோல்கள் வரும் என்றார்.

கடந்த சீசனில் இவ்விரு அணிகளும் சந்தித்த 2 ஆட்டங்களில் ஒன்றில் பெங்களூரு 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டம் டிரா ஆனது.

இந்த தொடரில் நேற்றிரவு நடந்த ஒரு ஆட்டத்தில் ஏ.டி.கே. மோகன் பகான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் எப்.சி. கோவாவை தோற்கடித்து 4-வது வெற்றியை பதிவு செய்தது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு