சென்னை,
இந்திய மகளிர் கால்பந்து வரலாற்றில் இதுவரை எந்தவொரு அணியும் செய்யாத சாதனையைச் செய்ய இந்திய யு-17 மகளிர் அணி மிக நெருக்கத்தில் உள்ளது. இன்று மாலை நடைபெறும் யு-17 மகளிர் ஆசியக் கோப்பை காலிறுதிப் போட்டியில், இந்திய அணி தொடரை நடத்தும் சீனாவுடன் மோதவுள்ளது.
தற்போது காலிறுதிக்கு முன்னேறியுள்ள இந்திய அணி, தனது கடைசி லீக் போட்டியில் லெபனானை 4-0 என்ற கணக்கில் வீழ்த்தி அசத்தியது. 2004-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏஎப்சி தொடரின் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய மகளிர் அணி இதுதான்.
இந்த ஆட்டத்தில் சீனாவை வீழ்த்தினால், இந்திய அணி இரண்டு முக்கிய சாதனைகளைப் படைக்கும். மொராக்கோவில் நடைபெறவுள்ள 2026 பிபா யு-17 மகளிர் உலகக்கோப்பைக்கு தகுதி பெறும்.
நடத்தும் நாடு என்ற தகுதியின்றி, தனது திறமையால் உலகக்கோப்பைக்குத் தகுதி பெற்ற முதல் இந்திய மகளிர் கால்பந்து அணி என்ற வரலாற்றைப் படைக்கும். முன்னதாக 2017 (ஆண்கள்) மற்றும் 2022 (பெண்கள்) ஆகிய ஆண்டுகளில் இந்தியா உலகக்கோப்பையில் விளையாடியிருந்தாலும், அவை போட்டியை நடத்திய நாடு என்ற அடிப்படையிலேயே அமைந்தன.
சீன அணி இந்தத் தொடரில் மிகவும் வலுவாக உள்ளது. தனது பிரிவில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று, மொத்தம் 15 கோல்களை அடித்துள்ளது (மாலத்தீவு, வியட்நாம் மற்றும் தாய்லாந்துக்கு எதிராக). இன்று காலிறுதியில் வெற்றி பெற்றால், இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறுவதுடன் நேரடியாக உலகக்கோப்பைக்கும் தகுதி பெறும்.