லண்டன்,
லண்டன் ஸ்டேடியத்தில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற முக்கியமான கால்பந்து போட்டியில் மான்செஸ்டர் சிட்டி-வெஸ்ட் ஹாம் யுனைடெட் அணிகள் மோதின. அதில் பலம் பொருந்திய மான்செஸ்டர் சிட்டி அணியை வெஸ்ட் ஹாம் அணி எதிர்கொண்டது.
இந்த போட்டியில் நான்கு முறை தொடர் சாம்பியனான மான்செஸ்டர் சிட்டி அணி அதிர்ச்சியளிக்கும் வகையில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.
மான்செஸ்டர் சிட்டி அணியை பெனால்ட்டி முறையில் 5-3 எனும் கோல் கணக்கில் வீழ்த்தி வெஸ்ட் ஹாம் யுனைடெட் அணி வெற்றி கண்டது.
மான்செஸ்டர் சிட்டி அணி இந்த முறை பைனலுக்கு தகுதி பெற்றிருந்தால் 9வது முறையாக கேரபாவோ கோப்பையை வென்று அசத்தி இருக்கும். ஆனால், இந்த தோல்வியின் மூலம், மான்செஸ்டர் சிட்டி அணியின் கோப்பை வெல்லும் கனவு பறிபோனது.
இதன்மூலம், நான்கு முறை தொடர்ந்து கோப்பையை வென்று வந்த அந்த அணியின் சாதனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
லிவர்பூல்-ப்ரெஸ்டன் அணிகள் மோதிய மற்றொரு போட்டியில் லிவர்பூல் அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் 2-0 எனும் கோல் கணக்கில் ப்ரெஸ்டன் அணியை வீழ்த்தி லிவர்பூல் அணி வெற்றி கண்டது.
டோட்டென்ஹாம்-பர்ன்லி அணிகள் இடையே நடைபெற்ற மற்றொரு போட்டியில் 1-0 எனும் கோல் கணக்கில் டோட்டென்ஹாம் அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டிகளில் பெற்ற வெற்றியின் மூலம் லிவர்பூல், டோட்டென்ஹாம் மற்றும் வெஸ்ட் ஹாம் யுனைடெட் அணிகள் கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
இப்போது லிவர்பூல் அணியின் பக்கம் அனைவரது கவனமும் திரும்பி உள்ளது.8 முறை சாம்பியனான லிவர்பூல் அணி இம்முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.
மறுபுறம் டோட்டென்ஹாம் அணி, கடந்த முறை பைனலில் மான்செஸ்டர் சிட்டி அணியிடம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. அந்த அணியும் இம்முறை கோப்பையை வெல்ல கடுமையாக போராடும்.