கால்பந்து

உலக கோப்பை கால்பந்து: டென்மார்க், ஆஸ்திரேலியா அணிகள் தகுதி

ரஷியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு டென்மார்க், ஆஸ்திரேலியா அணிகள் தகுதி பெற்றன.

தினத்தந்தி

டப்ளின்,

21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2018) ரஷியாவில் ஜூன் 14-ந் தேதி முதல் ஜூலை 15-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் 32 அணிகள் பங்கேற்கும். போட்டியை நடத்தும் ரஷியா தவிர எஞ்சிய 31 அணிகளும் தகுதி சுற்று போட்டிகள் மூலமே தான் நுழைய முடியும்.
இதில் நேற்று முன்தினம் இரவு அயர்லாந்து தலைநகர் டப்ளினில் நடந்த பிளே-ஆப் சுற்று 2-வது ஆட்டத்தில் டென்மார்க்-அயர்லாந்து அணிகள் மோதின.

இதில் 6-வது நிமிடத்தில் அயர்லாந்து அணி வீரர் ஷேன் டப்பி முதல் கோல் அடித்தார். அதன் பின்னர் டென்மார்க் அணி வீரர்கள் சுதாரித்து கொண்டு சிறப்பாக ஆடியதுடன் ஆட்டம் முழுவதும் ஆதிக்கம் செலுத்திகோல் மழை பொழிந்தனர். முடிவில் டென்மார்க் அணி 5-1 என்ற கோல் கணக்கில் அயர்லாந்து அணியை தோற்கடித்தது. டென்மார்க் அணி தரப்பில் கிறிஸ்டியன்சென் 29-வது நிமிடத்தில் முதல் கோல் திருப்பினார். கிறிஸ்டியன் எரிக்சென் 32-வது, 63-வது மற்றும் 74-வது நிமிடங்களில் தொடர்ந்து 3 கோல் அடித்து ஹாட்ரிக் சாதனை படைத்தார். நிக்லாஸ் பென்ட்னெர் 90-வது நிமிடத்தில் 5-வது கோல் அடித்தார்.

இந்த வெற்றியின் மூலம் டென்மார்க் அணி உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது. இரு அணிகள் இடையிலான பிளே-ஆப் சுற்று முதல் ஆட்டம் கோல் எதுவும் இன்றி டிராவில் முடிந்தது. டென்மார்க் அணி மொத்தத்தில் 5-வது முறையாக உலக கோப்பை போட்டிக்கு நுழைந்து இருக்கிறது.

ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் நேற்று நடந்த பிளே-ஆப் சுற்றின் 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-ஹோண்டுராஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. பின் பாதியில் அசத்திய ஆஸ்திரேலிய அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஹோண்டுராஸ் அணியை வீழ்த்தியது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக 4-வது முறையாக உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது.

உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு இதுவரை 31 அணிகள் தகுதி பெற்றுள்ளன. எஞ்சிய ஒரு இடத்துக்கான ஆட்டத்தில் நியூசிலாந்து-பெரு அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி உலக கோப்பை போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை