செயின்ட் பீட்டர்ஸ்பர்க்,
உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. 2-வது நாளான இன்று மூன்று லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
முன்னதாக ஏ பிரிவில் அங்கம் வகிக்கும் எகிப்து-உருகுவே அணிகள் இடையிலான லீக் ஆட்டம் எகடெரின்பர்க்கில் நடைபெற்றது. எகிப்து அணியில் நட்சத்திர வீரரான முகமது சாலா காயத்தால் இடம்பெறவில்லை. உருகுவே அணியில் சுவாரஸ் மற்றும் கவானி இடம்பிடித்திருந்தனர்.
ஆட்டம் தொடங்கியது முதல் உருகுவே அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் முதல்பாதி நேர ஆட்டம் கோலின்றி முடிவடைந்தது.
2-வது பாதி நேரத்திலும் உருகுவே அணியில் கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டம் முடிய இரண்டு நிமிடங்களே இருந்ததால் போட்டி டிராவில் முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் கார்லோஸ் சான்செஸ் பந்தை தூக்கி அடிக்க, மரியா கிமேனெஸ் தலையால் முட்டி கோலாக்கினார். இதனால் உருகுவே 1-0 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் காயத்திற்கான நேரம் கணக்கிட்டு 5 நிமிடம் கூடுதலாக வழங்கப்பட்டது. இந்த நேரத்தில் எகிப்பு அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் உருகுவே 1-0 என வெற்றி பெற்றது.
இந்நிலையில் பி பிரிவில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடந்த ஆட்டத்தில் ஆப்பிரிக்க தேசமான மொராக்கோவும், ஆசிய நாடான ஈரானும் மோதின.
20 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பை போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும் மொராக்கோ அணி தரவரிசையில் 14-வது இடம் வகிக்கிறது. கடைசியாக ஆடிய 18 சர்வதேச போட்டிகளில் தோல்வியே சந்திக்காத மொராக்கோ, அதே உத்வேகத்துடன் ஈரானையும் எதிர்கொண்டது. வலுவான தடுப்பு அரணும், ஒருங்கிணைந்த ஆட்டமே மொராக்கோவின் பலத்தை பறைசாற்றக்கூடியதாகும். இதில் ஹகிம் ஜியேச், காலித் பவுடாய்ப் அந்த அணியின் முக்கியமான வீரர்கள் ஆவர்.
உலக கோப்பை போட்டியில் 5-வது முறையாக களம் காணும் ஈரான் அணி இதுவரை ஒரு ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அந்த வெற்றி 1998-ம் ஆண்டு உலக கோப்பையில் கிடைத்தது. முதல் சுற்றை கடப்பது மலைப்பான விஷயம் என்பதை உணர்ந்துள்ள மசோத் ஷோஜய் தலைமையிலான ஈரான் அணி வீரர்கள் ஒரு வெற்றியாவது பெற வேண்டும் என்ற முனைப்பில் களம் இறங்கினர்.
இரு அணியினருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. இறுதியில் ஈரான் அணி சார்பில் 1 கோல் அடிக்கப்பட்டது. இதன் மூலம் மொராக்கோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஈரான் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று முன்னிலை பெற்றது.