கால்பந்து

உலகக் கோப்பை கால்பந்து: இந்தியாவின் நிலைமை என்ன ?

இந்தியா முன்னேறாமல் இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.

மும்பை,

23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி நாளை (வியாழக்கிழமை) கோலாகலமாக தொடங்குகிறது. அமெரிக்கா, மெக்சிகோ, கனடா இணைந்து நடத்தும் இந்த போட்டியில் 48 அணிகள் பங்கேற்கின்றன.

இந்திய அணி இதுவரை உலகக் கோப்பை கால்பந்தில் விளையாடியதில்லை. ஒவ்வொரு முறையும் தகுதி சுற்றோடு வெளியேறி விடுகிறது. இந்த சீசனில் ஆசிய மண்டலத்துக்கான தகுதி சுற்றில் 2-வது ரவுண்டில் 'ஏ' பிரிவில் இடம் பெற் றிருந்த இந்தியா 3-வது இடத்தை பிடித்து அடுத்த ரவுண்டுக்கு செல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது. கால்பந்தில் இந்தியா முன்னேறாமல் இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.

முன்னதாக இந்தியாவுக்கு ஒரே ஒரு முறை உலகக் கோப்பையில் ஆட வாய்ப்பு கிடைத்தும் தவற விட்டது துரதிர்ஷ்டமே.இரண்டாம் உலகப் போர் காரணமாக 12 ஆண்டுக்கு பிறகு 4-வது உலகக்கோப்பை தொடர் பிரேசிலில் நடந்தது. ஆசியா சார்பில் பங்கேற்க இந்தியாதகுதி பெற்றது. ஆனால் அதிகப்படியான பயணச் செலவு, பயிற்சிக்குபோதிய நேரமின்மை, உலகக் கோப்பையை விட ஒலிம்பிக் தான் முக்கியம் உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி போட்டியில் இந்தியா பங்கேற்க மறுத்தது. தொடர்ந்து எந்த உலகக்கோப்பையிலும் இந்திய அணி தகுதி பெறவில்லை.

இந்திய கால்பந்து சம்மேளனம் பெரும்பகுதி நிதி நிர்வாகம் மற்றும் கூட்டங்களுக்கே செலவிடப்படுவதாகவும், அடிமட்ட அளவிலான கால்பந்து வளர்ச்சிக்கு மிகக் குறைந்த நிதியே ஒதுக்கப்படுவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

சர்வதேசத் தரம் வாய்ந்த வீரர்களை உருவாக்குவதற்குத் தேவையான உயர்தரப் பயிற்சி உள்கட்டமைப்புகளும், தகுதியான பயிற்சியாளர்களும் இந்தியாவில் பெருமளவில் பற்றாக்குறையாக உள்ளனர்.இதனால் இந்திய அணி உலகக்கோப்பைக்கு தகுதி பெறுவது பெரும் சவாலாக உள்ளது.