விளையாட்டு

வரலாறு படைப்பாரா பெடரர்? சிலிச்சுடன் இன்று மோதல்

வரலாறு படைப்பாரா பெடரர்? சிலிச்சுடன் இன்று மோதல்

விம்பிள்டன் டென்னிஸ் திருவிழா இன்றுடன் முடிவுக்கு வருகிறது. கடைசி நாளான இன்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடக்கும் இறுதி ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரும், குரோஷியாவின் மரின் சிலிச்சும் மோதுகிறார்கள்.

7 முறை சாம்பியனான 35 வயதான ரோஜர் பெடரர், இந்த முறையும் வாகை சூடினால் விம்பிள்டன் பட்டத்தை 8 முறை வென்ற முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை படைப்பார். அவரது ஒட்டுமொத்த கிராண்ட்ஸ்லாம் பட்டங்களின் எண்ணிக்கை 19 ஆக உயரும். இதுவரை எந்த செட்டையும் இழக்காத பெடரருக்கே பட்டம் வெல்ல பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது. அதே சமயம் விம்பிள்டனில் முதல் முறையாக இறுதிசுற்றில் கால்பதித்திருக்கும் 28 வயதான மரின் சிலிச்சும் லேசுப்பட்டவர் அல்ல. கடும் சவால் கொடுக்க காத்திருக்கிறார்.

இருவரும் இதுவரை 7 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி அதில் 6-ல் பெடரரும், ஒன்றில் சிலிச்சும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். பெடரர் வென்றால் தரவரிசையில் 5-வது இடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு முன்னேறுவார். சிலிச் பட்டத்தை வசப்படுத்தினால் தரவரிசையில் ஒரு இடம் ஏற்றம் கண்டு 5-வது இடத்தை பிடிப்பார். இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.