இந்தோனேஷியாவில் 18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் இன்று வெண்கல பதக்கத்திற்கான ஹாக்கி ஆடவர் போட்டி நடந்தது. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடின.
இந்த போட்டியின் 3வது நிமிடத்தில் இந்தியாவின் ஆகாஷ்தீப் சிங் முதல் கோலை அடித்து வெற்றியை நோக்கி அணியை கொண்டு சென்றார். இதனால் தொடக்கம் முதல் ஆட்டம் விறுவிறுப்புடன் இருந்தது. தொடர்ந்து 50வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பினை ஹர்மன்பிரீத் சிங் கோலாக மாற்றினார்.
இதனால் இந்தியா 2 கோல்கள் அடித்து போட்டியில் முன்னிலை பெற்றிருந்தது. போட்டியின் 52வது நிமிடத்தில் பாகிஸ்தானின் முகமது ஆதிக் ஒரு கோல் அடித்தது இந்திய ரசிகர்களிடையே இதய துடிப்பினை அதிகரித்தது.
இந்திய ஹாக்கி அணி மலேசியாவுடன் நடந்த அரை இறுதி போட்டியில் இதேபோன்ற தவறை செய்தது. இந்த முறை அதற்கு இடம் தராமல் முன்னிலையை தக்க வைத்தது.
இதனால் உலக தர வரிசையில் 5வது இடம் வகிக்கும் இந்தியா 13வது இடம் வகிக்கும் பாகிஸ்தான் அணியை போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்றது.