ஹாக்கி

யு-18 ஆசியக் கோப்பை ஆக்கி: கொரியாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

இந்திய அணி தென் கொரியாவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

காகமிகஹாரா ,

ஜப்பானின் காகமிகஹாரா நகரில் நடைபெற்று வரும் 18 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை ஆக்கி தொடரில், இந்திய அணி தென் கொரியாவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

கேத்தன் குஷ்வாஹாவின் இரட்டை கோல்

ஆட்டத்தின் 3-வது நிமிடத்திலேயே கேத்தன் குஷ்வாஹா கோல் அடித்து இந்தியாவுக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். அதனைத் தொடர்ந்து 5-வது நிமிடத்தில் வரிந்தர் சிங் கோல் அடித்து இந்தியாவின் முன்னிலையை 2-0 ஆக உயர்த்தினார்.

கொரியாவின் பதிலடி

21-வது நிமிடத்தில் கொரிய அணியின் கேப்டன் ஜேஹியோக் பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக மாற்றி, அணியின் கோல் கணக்கை தொடங்கினார். இதனால் முதல் பாதி முடிவில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

வெற்றியை உறுதி செய்த இந்தியா

இரண்டாம் பாதியில் மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியா, 36-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக மாற்றியது. தனது இரண்டாவது கோலை அடித்த கேத்தன் குஷ்வாஹா, இந்தியாவின் முன்னிலையை 3-1 ஆக மாற்றினார். தொடர்ந்து ஷாருக் அலி கோல் அடித்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார்.

அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்த இந்தியா

இந்த வெற்றியின் மூலம் பூல்-ஏ பிரிவில் இந்தியா, கொரியா மற்றும் ஜப்பான் அணிகள் தலா 6 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் மட்டுமே அரையிறுதிக்குத் தகுதி பெறும் என்பதால், அடுத்த போட்டி இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது.

நாளை சீனா தைபேவுடன் மோதல்

இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில் சீனா தைபே அணியை நாளை மதியம் 1.30 மணிக்கு எதிர்கொள்கிறது.அந்தப் போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில், இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு மேலும் வலுப்பெறும்.