ஹாக்கி

நேஷன்ஸ் கோப்பை ஆக்கி: இந்தியா-நியூசிலாந்து இன்று மதியம் இறுதி போட்டியில் மோதல்

ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா 3 போட்டிகளில் விளையாடி 9 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.

ஆக்லாந்து

சர்வதேச ஆக்கி கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் நேஷன்ஸ் கோப்பைக்கான சர்வதேச மகளிர் ஆக்கி போட்டிகள் நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்தில் நடந்து வருகின்றன. இதில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் சிலியை எதிர்த்து இந்திய அணி விளையாடியது.

இந்திய அணியில் நவ்னீத் கவுர் (6-வது, 13-வது நிமிடம்), தீபிகா (14-வது, 18-வது நிமிடம்), நேஹா (32-வது நிமிடம்). ருதுஜா (39-வது நிமிடம்) கோலடித்தனர். எதிர் தரப்பில் இருந்து கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால், 6-0 என்ற கோல் கணக்கில் சிலியை எளிதில் வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

ஏ பிரிவில் இந்தியா

அதற்கு முன்பு நடந்த போட்டி ஒன்றில் 3-2 என்ற புள்ளி கணக்கில் உருகுவேவை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறி இருந்தது. இதேபோன்று, மற்றொரு அரையிறுதியில், அமெரிக்க அணியை வீழ்த்தி நியூசிலாந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. அந்த போட்டி இன்று மதியம் நடைபெறுகிறது. இந்த தொடரில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா 3 போட்டிகளில் விளையாடி 9 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. பி பிரிவில் இடம் பெற்றுள்ள நியூசிலாந்து அணியும் 3 போட்டிகளில் விளையாடி 9 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்துள்ளது. அதனால், சாம்பியன் பட்டம் பெறப்போவது யார்? என்ற விறுவிறுப்பு கூடியுள்ளது.