பிற விளையாட்டு

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் கால்இறுதியில் சாய்னா, ஸ்ரீகாந்த் தோல்வி

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடர் பர்மிங்காமில் நடந்து வருகிறது.

பர்மிங்காம்,

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடர் பர்மிங்காமில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான இந்தியாவின் சாய்னா நேவால், நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் மங்கையுமான தாய் ஜூ யிங்குடன் (சீனதைபே) மோதினார். சாய்னாவுக்கு, தாய் ஜூ யிங்கை சந்திப்பது என்றாலே அலர்ஜி தான். ஏனெனில் அவருக்கு எதிராக கடைசியாக மோதிய 12 ஆட்டங்களிலும் வரிசையாக தோல்வி கண்டு இருந்தார். இந்த ஆட்டத்திலும் சாய்னாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வழக்கம் போல் ஆக்ரோஷமாக விளையாடி தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிய தாய் ஜூ யிங் 21-15, 21-19 என்ற நேர் செட் கணக்கில் சாய்னாவை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 37 நிமிடங்கள் நடந்தது.

தோல்விக்கு பிறகு சாய்னா கூறுகையில், கடந்த மூன்று நாட்களாக எனக்கு உடல்நிலை சரியில்லை. வயிற்று போக்கு காரணமாக என்னால் சரியாக தூங்க முடியவில்லை. ஆனாலும் சமாளித்து விளையாடிய விதத்தை நினைத்து பெருமை கொள்கிறேன் என்றார். தாய் ஜூ யிங்குடன் மீண்டும் மீண்டும் விளையாடுவது நல்ல விஷயம் தான். அவரை எப்படி வீழ்த்துவது என்பதை கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் சாய்னா குறிப்பிட்டார். நூற்றாண்டு கால பழமைவாய்ந்த ஆல் இங்கிலாந்து பேட்மிண்டனில் இதுவரை எந்த இந்திய வீராங்கனைகளும் மகுடம் சூடியதில்லை. இந்த முறையும் அந்த சோகம் தொடருகிறது. மற்றொரு இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து முதல் சுற்றுடன் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

ஆண்கள் ஒற்றையர் கால்இறுதியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 12-21, 16-21 என்ற நேர் செட்டில் நம்பர் ஒன் வீரர் கென்டோ மோமோட்டாவிடம் (ஜப்பான்) வீழ்ந்தார்.