சென்னை,
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த அணிகள் கலந்து கொள்கின்றன.
போட்டியை நடத்தும் நாடு என்பதால் இந்தியா சார்பில் ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 2 அணிகள் களம் இறங்குகின்றன. இந்திய பி அணிகளில் இளம் வீரர், வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான இந்திய அணிகளை அகில இந்திய செஸ் சம்மேளனம் நேற்று அறிவித்தது. இந்திய அணிகள் வருமாறு:-
ஓபன் பிரிவுக்கான இந்திய ஏ அணி: விதித் குஜராத்தி, பி.ஹரிகிருஷ்ணா, அர்ஜூன் எரிகைசி, எஸ்.எல். நாராயணன், கே.சசிகிரண்.
ஓபன் பிரிவுக்கான இந்திய பி அணி: நிஹால் சரின், டி.குகேஷ், பி.அதிபன், ஆர்.பிரக்ஞானந்தா, ரவுனக் சத்வானி.
பெண்கள் பிரிவுக்கான இந்திய ஏ அணி: கோனேரு ஹம்பி, டி.ஹரிகா, ஆர்.வைஷாலி, டானியா சச்தேவ், பக்தி குல்கர்னி.
பெண்கள் பிரிவுக்கான இந்திய பி அணி: வந்திகா அகர்வால், சவுமியா சுவாமிநாதன், மேரி ஆன் கோம்ஸ், பத்மினி ரூட், திவ்யா தேஷ்முக்.
இந்திய அணியில் இடம் பிடித்து இருக்கும் பிரக்ஞானந்தா, வைஷாலி ஆகியோர் உடன் பிறந்தவர்கள். சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் அக்கா வைஷாலி என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா சார்பில் உடன் பிறந்தவர்கள் கலந்து கொள்வது இது 2-வது முறையாகும். ஏற்கனவே 1988-ம் ஆண்டு போட்டியில் சரிதா, சுதாகர் பாபு ஆகிய உடன்பிறந்தவர்கள் பங்கேற்று இருந்தனர். இந்திய அணியின் ஆலோசகராக 5 முறை உலக சாம்பியனான தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் உள்ளார்.
அணி குறித்து இந்திய செஸ் சம்மேளன செயலாளர் பரத்சிங் சவுகான் கூறுகையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இரண்டு இந்திய அணிகள் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதன் மூலம் பல இளம் வீரர்களுக்கு இந்த பெரிய போட்டியில் தங்களது திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. இந்திய அணி இளம் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர், வீராங்கனைகளுடன் வலுவாக உள்ளது. இந்த வாய்ப்பை இந்திய அணி நன்றாக பயன்படுத்தி கொள்ளும் என்று நம்புகிறேன் என்றார்.