நோமி,
ஆசிய 20 கிலோமீட்டர் நடைபந்தய சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பானின் நோமி நகரில் நேற்று நடந்தது. இதில் ஓபன் பிரிவில் இந்திய வீரர்கள் விகாஷ் சிங் ஒரு மணி 20 நிமிடம் 0.5 வினாடிகளில் 2-வது இடமும், பரம்ஜீத் சிங் பிஷ்த் 1 மணி 20 நிமிடம் 0.8 வினாடிகளில் கடந்து 3-வது இடமும் பெற்றனர். சீனாவின் கியான் ஹைய்பெங் (1 மணி 19.09 நிமிடம்) தங்கப்பதக்கம் வென்றார்.
ஆகஸ்டு மாதம் ஹங்கேரியில் நடக்கும் உலக தடகள சாம்பியன்ஷிப் மற்றும் 2024-ம் ஆண்டு பாரீசில் நடக்கும் ஒலிம்பிக் 20 கிலோமீட்டர் நடை பந்தயத்திற்கான தகுதி இலக்காக 1 மணி 20 நிமிடம் 10 வினாடிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 3 பேருமே அந்த இலக்கை கடந்து விட்டதால் ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப்புக்கு தகுதி பெற்றுள்ளனர்.
ஆண்கள் பிரிவின் 20 கிலோமீட்டர் நடைபந்தயத்தில் இந்திய வீரர் அக்ஷ்தீப்சிங் 1 மணி 20 நிமிடம் 57 வினாடிகளில் இலக்கை எட்டி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இதன் பெண்கள் பிரிவில் இந்தியாவின் பிரியங்கா கோஸ்வாமி 3-வதாக வந்து வெண்கலப்பதக்கம் வசப்படுத்தினார். இவர்கள் இருவரும் ஏற்கனவே ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று விட்டது குறிப்பிடத்தக்கது.