கோப்புப்படம்  
பிற விளையாட்டு

ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப்: தென்கொரியாவை வீழ்த்தி இந்திய அணி தங்கம் வென்று சாதனை

ஆசிய சாம்பியன்ஷிப்பில் இந்திய ஆண்கள் அணி 2007-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக தங்கப்பதக்கத்தை ருசித்துள்ளது.

தினத்தந்தி

டாக்கா,

24-வது ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடந்து வந்தது. கடைசி நாளான நேற்று நடந்த ரிகர்வ் பெண்கள் தனிநபர் பிரிவின் இறுதி சுற்றில் இந்திய வீராங்கனை அங்கிதா பகத் 7-3 என்ற செட் கணக்கில் பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான நாம் சுஹியோனை (தென்கொரியா) வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். முன்னதாக நடந்த வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்திய நட்சத்திரம் சங்கீதா 6-5 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீராங்கனையான தீபிகா குமாரியை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

இதன் ஆண்கள் தனிநபர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய வீரர் தீரஜ் பொம்மதேவரா 6-2 என்ற செட் கணக்கில் சக நாட்டவரான ராகுலை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை முத்தமிட்டார். ஆண்கள் அணிகள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் யாஷ்தீப், அதானு தாஸ், ராகுல் ஆகியோர் அடங்கிய இந்திய அணியுடன் மல்லுக்கட்டிய வலுவான தென்கொரியா தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்தியது. 3-வது செட் முடிவில் 2-4 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த இந்திய அணி அதன் பிறகு சரிவில் இருந்து மீண்டு 4-4 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது. வெற்றியை நிர்ணயிக்க ஷூட்-ஆப் முறை கடைபிடிக்கப்பட்டது. ஷூட் ஆப்பில் இந்திய அணியினர் 10, 9, 10 என 29 புள்ளிகள் எடுத்தனர். தென் கொரியாவும் 29 புள்ளி எடுத்ததால் சமநிலை நீடித்தது.

இதையடுத்து 10 புள்ளி எடுத்ததில் இந்திய வீரர் அதானு தாஸ், எதிரணி வீரரை விட இலக்கை நோக்கி அம்பை துல்லியமாக எய்து இருந்ததன் அடிப்படையில் ஷூட்-ஆப்பை இந்தியா கைப்பற்றியது. முடிவில் இந்திய அணி 5-4 என்ற செட் கணக்கில் தென்கொரியாவுக்கு அதிர்ச்சி அளித்து தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கியது. ஆசிய சாம்பியன்ஷிப்பில் இந்திய ஆண்கள் அணி 2007-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக தங்கப்பதக்கத்தை ருசித்துள்ளது. இந்த போட்டியில் இந்தியா 6 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என 10 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்