புதுடெல்லி,
ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் மங்கோலியாவில் வருகிற ஏப்ரல் 19ந்தேதி முதல் 24ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, உத்தர பிரதேசத்தின் லக்னோ நகரில் உள்ள இந்திய விளையாட்டு கழகத்தில், போட்டியில் பங்கு பெறும் மல்யுத்த வீராங்கனைகளை தேர்வு செய்யும் பணி நாளை நடைபெறுகிறது.
இந்த நிலையில், 23 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்ற நிஷா தாஹியா உள்பட 10 மல்யுத்த வீராங்கனைகளை, தேர்வு செய்வதற்கான போட்டியில் கலந்து கொள்ள தடை விதித்து, இந்திய மல்யுத்த கூட்டமைப்பு உத்தரவிட்டு உள்ளது. இதனால், போட்டிகளில் அவர்களால் பங்கேற்க முடியாத சிக்கலான நிலை ஏற்பட்டு உள்ளது.
லக்னோ நகரில் உள்ள தேசிய பயிற்சி முகாமில் அவர்கள் கலந்து கொள்ளாத நிலையில், அவர்களிடம் விளக்கம் கேட்கப்படும் என இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது. ஒழுக்கமின்மையை சகிக்க முடியாது என்றும் கடுமையாக எச்சரித்து உள்ளது.
ஆசிய சாம்பியன்ஷிப் போன்ற போட்டிகளை தவறவிடுவது அவர்களுக்கு நிச்சயம் ஒரு பாடம் ஆகவே இருக்கும் என்றும் கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் ஷரண் சிங் செய்தியாளர்களிடம் இன்று கூறியுள்ளார்.
கடந்த 2016ம் ஆண்டு முதல், குறைந்தது 4 இந்திய மல்யுத்த வீரர்கள் ஊக்க மருந்து பயன்படுத்தியதற்காக பிடிபட்டு உள்ளனர். சர்வதேச போட்டியின்போது இதுபோன்ற, ஒவ்வொரு குற்றத்திற்கும், 20 ஆயிரம் சுவிஸ் பிராங்குகளை அபராதம் என்ற பெயரில் செலுத்த வேண்டியிருந்தது என இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.
கடந்த சில ஆண்டுகளில், நாங்கள் எந்த தவறும் செய்யாமல் உலக மல்யுத்த கூட்டமைப்புக்கு 80 ஆயிரம் சுவிஸ் பிராங்குகளை (65 லட்சம் வரை) அபராத தொகையாக செலுத்தியுள்ளோம். எங்கள் மல்யுத்த வீராங்கனைகள் தேசிய முகாமில் பயிற்சி பெற வேண்டும். இதனால் அவர்கள் தடை செய்யப்பட்ட எந்தவொரு பொருளையும் எடுத்து கொள்ள நினைத்து கூட பார்க்கமாட்டார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
இதனால், 23 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்ற நிஷா தாஹியா உள்பட 10 மல்யுத்த வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் இருந்து தங்களை விடுவிக்கும்படி, 65 கிலோ எடை பிரிவில் போட்டியிட கூடிய நிஷா உள்ளிட்ட வீராங்கனைகள் மன்னிப்பு கோரினர். எனினும், அதனை ஏற்க கூட்டமைப்பு மறுப்பு தெரிவித்து விட்டது.
இதனை தொடர்ந்து, ஹனி குமாரி (50 கிலோ), அங்குஷ் (53 கிலோ), அஞ்சு (55 கிலோ), ராமன் (55 கிலோ), கீதா (59 கிலோ), பத்தேரி (65 கிலோ), பிரியங்கா (65 கிலோ), நாய்னா (68 கிலோ) மற்றும் பூஜா (76 கிலோ) ஆகியோருக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. காயத்தினால் கீதா விளையாடவில்லை. இதனால், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியிலும் அவர்களால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.