புதுடெல்லி,
ஸ்பெயின் நாட்டின் கேஸ்டெல்லான் டி லா பிளானா நகரில் பாக்சம் எலைட் சர்வதேச குத்து சண்டை போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் 17 நாடுகளை சேர்ந்த 127 குத்து சண்டை வீரர், வீராங்கனைகள் பங்கேற்று உள்ளனர்.
இறுதி போட்டியில் வெற்றி பெறும் 15 பேர் சாம்பியன்களாக முடி சூடுவார்கள். இந்தியாவை சேர்ந்த, ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட கூடிய அனைத்து 9 குத்து சண்டை வீரர்களும் இந்த போட்டிகளில் விளையாடுகின்றனர்.
மேரி கோம், அமித் பங்கால் உள்ளிட்ட 12 இந்தியர்கள் காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இதில் 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம், இத்தாலி நாட்டின் கியோர்டானா சொரன்டினோவை எதிர்த்து 51 கிலோ எடை பிரிவில் விளையாடுகிறார்.
இதேபோன்று ஸ்பெயின் நாட்டின் கேப்ரியல் எஸ்கோபரை எதிர்த்து இந்தியாவின் அமித் பங்கால் 52 கிலோ எடை பிரிவிற்கான காலிறுதி போட்டியில் விளையாடுகிறார்.
69 கிலோ எடை பிரிவிற்கான காலிறுதி போட்டியில் விகாஸ் கிருஷ்ணன், இத்தாலியின் வின்சென்ஜோ மேங்கியாகேப்ரியை எதிர்த்து விளையாடுகிறார்.
வீராங்கனை வரிசையில் ஜாஸ்மின் மற்றும் மணிஷா ஆகியோர் 57 கிலோ எடை பிரிவிற்கான காலிறுதி போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளனர்.