பர்மிங்காம்,
72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா இதுவரை 5 தங்கம், 6 வெள்ளி, 6 வெண்கலம் என 17 பதக்கங்களை கைப்பற்றி இருக்கிறது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் இறுதி போட்டியில் இந்தியாவின் தேஜஸ்வின் சங்கர் 2.22 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப்பதக்கத்தை கைபற்றினார். இதன் மூலம் உயரம் தாண்டுதலில் காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவின் முதல் பதக்கத்தை தேஜஸ்வின் சங்கர் வென்று தந்துள்ளார்.
இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 18-ஆக உயர்ந்துள்ளது. இந்த காமன்வெல்த்தில் இந்தியா இதுவரை 5 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் என 18 பதக்கத்துடன் பதக்க பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.