சண்டிகர்,
பழம்பெரும் இந்திய தடகள வீரர் மில்கா சிங் (வயது 91). கடந்த மே மாத இறுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மொகாலியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆக்சிஜன் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் அவரது உடல்நிலை சீராக இருப்பதால் அவரை ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யும்படி அவரது குடும்பத்தினர் கேட்டு கொண்டனர். இதனையடுத்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்நிலையில், மில்கா சிங்கிற்கு ஆக்சிஜன் அளவு குறைந்து உள்ளது. இதனால் கடந்த 3ந்தேதி, சண்டிகரில் உள்ள மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் கொரோனா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ.) சேர்க்கப்பட்டு உள்ளார். தொடர்ந்து அவரது உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவரது நிலை சீராக உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நிமோனியாவால் பாதிக்கப்பட்ட அவரது மனைவி நிர்மல் கவுர் (வயது 85) மொகாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மாலை 4 மணியளவில் அவர் உயிரிழந்து உள்ளார். இதனை அவரது குடும்பத்தினர் வெளியிட்டு உள்ள அறிக்கை தெரிவிக்கின்றது.
நிர்மல் கவுர் பஞ்சாப் அரசில் மகளிர் விளையாட்டு துறையின் முன்னாள் இயக்குனராக பதவி வகித்தவர். இந்திய தேசிய மகளிர் வாலிபால் அணியின் முன்னாள் கேப்டனாகவும் அவர் இருந்துள்ளார்.
அவரது மறைவுக்கு பஞ்சாப் விளையாட்டு துறை மந்திரி ராணா குர்மித் சிங் சோதி இன்று இரங்கல் தெரிவித்து உள்ளார்.