ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள லச்சிபோரா போனியாரில், இந்திய ராணுவம் சார்பில் பாரா தடகள விளையாட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்திய ராணுவமும், தன்னார்வ மருத்துவ சங்கமும் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துள்ள தன்னார்வ மருத்துவ சங்கம் (வி எம் எஸ்) 1970ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அந்த சங்கம் கடந்த 50 வருடங்களாக பாரா தடகள வீரர்களை ஆதரித்து வருகிறது.இந்த விளையாட்டு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சக்கர நாற்காலி கூடைப்பந்து மற்றும் கைப்பந்து விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
பாரா தடகள வீரர்களுக்கான ஆரோக்கியம், சமூக ஒருங்கிணைப்பு மற்றும் உரிமைகள் எனும் கருத்தை மையமாக கொண்டு இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்த லச்சிபோரா பாட்டாலியனின் ராணுவ தளபதி , பாரா தடகள வீரர்களின் உடல் கட்டுப்பாடுகள், அவர்களுடைய இலட்சியத்திற்கு ஒரு தடையாக இல்லை என்று குறிப்பிட்டார்.
இந்த விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்ட காஷ்மீரைச் சேர்ந்த பங்கேற்பாளர் ஒருவர் கூறுகையில், இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த இந்திய ராணுவத்துக்கு நன்றி. இன்னும் இது போன்ற அதிகமான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய கேட்டுக் கொள்கிறேன். வருங்காலத்தில் விளையாட்டு துறையில் காஷ்மீர் வளரும் என நம்புகிறேன் என்று கூறினார்.மேலும், இந்திய ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர்.