வாரங்கல்,
60-வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி தெலுங்கானா மாநிலம் வாரங்கலில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை ஆர்.வித்யா 58.47 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
அவர் ஏற்கனவே 400 மீட்டர் ஓட்டத்திலும் தங்கம் வென்றிருந்தார். இதன் ஆண்கள் பிரிவில் தமிழக வீரர் சந்தோஷ்குமார் 50.79 வினாடிகளில் முதலாவது வந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். 1,500 மீட்டர் ஓட்டத்தில் தேசிய சாதனை படைத்த பஞ்சாப் வீராங்கனை ஹர்மிலன் கவுர் பெய்ன்ஸ் 800 மீட்டர் ஓட்டத்திலும்(2 நிமிடம் 03.82 வினாடி)வாகை சூடி அசத்தினார்.