பிற விளையாட்டு

கேல்ரத்னா, அர்ஜூனா உள்பட தேசிய விளையாட்டு விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி

கேல்ரத்னா, அர்ஜூனா உள்பட தேசிய விளையாட்டு விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று வழங்கினார்.

தினத்தந்தி

நீரஜ் சோப்ராவுக்கு விருது

விளையாட்டுத்துறையில் அசத்தும் வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் ஆண்டுதோறும் மேஜர் தயான்சந்த் கேல்ரத்னா, அர்ஜூனா விருதுகளை வழங்கி கவுரவிக்கிறது. இந்த ஆண்டுக்கான உயரிய கேல்ரத்னா விருதுக்கு, டோக்கியோ ஒலிம்பிக்கில் தடகளத்தில் தங்கப்பதக்கம் வென்று சரித்திர சாதனை நிகழ்த்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, இதே ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் கைப்பற்றிய ரவிகுமார் தஹியா (மல்யுத்தம்), வெண்கலம் வென்ற லவ்லினா (குத்துச்சண்டை), ஒலிம்பிக் ஆக்கியில் வெண்கலப்பதக்கத்தை சொந்தமாக்கிய இந்திய அணியில் அங்கம் வகித்த கேப்டன் மன்பிரீத் சிங், கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ், மாற்றுத்திறனாளிகளுக்கான பாராஒலிம்பிக்கில் தங்கப்பதக்கத்தை அறுவடை செய்தவர்களான அவனி லெகரா, மனிஷ் நார்வால் (இருவரும் துப்பாக்கி சுடுதல்), சுமித் அன்டில் (ஈட்டி எறிதல்), பிரமோத் பகத், கிருஷ்ணா நாகர் (இருவரும் பேட்மிண்டன்) மற்றும் இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி, பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலிராஜ் ஆகிய 12 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இதில் சுனில் சேத்ரி இந்த விருதை பெறும் முதல் இந்திய கால்பந்து வீரர் ஆவார். இதே போல் இந்திய பெண்கள் கிரிக்கெட்டில் கேல் ரத்னா மூலம் அங்கீகரிக்கப்பட்ட முதல் வீராங்கனை என்ற பெருமையை மிதாலி ராஜ் பெற்றார்.

கிரிக்கெட் வீரர் தவான்

இதேபோல் அர்ஜூனா விருதுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான், வாள்சண்டை வீராங்கனை தமிழகத்தை சேர்ந்த சி.ஏ.பவானி தேவி, பாரா டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினா பட்டேல், கபடி வீரர் சந்தீப் நார்வால், டென்னிஸ் வீராங்கனை அங்கிதா ரெய்னா, மல்யுத்த வீரர் தீபக் பூனியா, துப்பாக்கி சுடுதல் வீரர் அபிஷேக் வர்மா உள்பட 35 பேர் தேர்வானார்கள். இதில் டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்கள் ஆக்கியில் பதக்கம் வென்ற 16 வீரர்களும் அடங்குவர். இவர்களுக்கான விருது வழங்கும் விழா டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று மாலை விமரிசையாக நடைபெற்றது. விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கி பாராட்டினார்.

கேல் ரத்னா விருதுக்கு பாராட்டு பட்டயத்துடன் ரூ.25 லட்சமும், அர்ஜூனா விருதுக்கு ரூ.15 லட்சமும் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது. இதே போல் சிறந்த பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருதை தமிழகத்தை சேர்ந்த எஸ்.ராமன் (டேபிள் டென்னிஸ்) உள்பட 10 பேரும், வாழ்நாள் சாதனையாளருக்கான தயான்சந்த் விருதை விகாஸ் குமார் (கபடி), அபிஜீத் குந்தே (செஸ்) உள்பட 5 பேரும் பெற்றனர். துரோணாச்சார்யா விருதுக்கு ரூ.15 லட்சமும், தயான்சந்த் விருதுக்கு ரூ.10 லட்சமும் அளிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு கொரோனா பரவலால் தேசிய விளையாட்டு விருதுகள் ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டது. ஆனால் இந்த முறை நேரில் விருதுகளை பெற்றதால் வீரர்கள் மகிழ்ச்சியுடன் பரவசமடைந்தனர். மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்குர், முன்னாள் விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து